இயேசு செய்த அருங்குறிகள் பலவற்றுக்கும் அடிப்படை, நலம் பெற்றவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை. பல நேரங்களில் நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் என்றார்.

இன்றைய காலக்கட்டத்தில் அடிக்கடி ஒரு கேள்வி விசுவாசிகளிடையே எழுவதுண்டு. அக்காலத்தில் நிறைய புதுமைகள் இடம்பெற்றதாகக் கேள்விப்படுகிறோமே, இப்போதெல்லாம் ஏன் புதுமைகள் பற்றி நாம் கேள்விப்படுவதில்லை என்று. உண்மைதான். இன்று விசுவாசம் குறைவுபட்டுள்ளதா அல்லது புதுமைகளுக்கு புதிய விளக்கங்கள் கிட்டியுள்ளனவா?. அன்று, தன்னை நாடிவந்தோரின் நம்பிக்கையின் துணைகொண்டு புதுமைகள் நிகழ்ந்தன. இயேசுவும் உன் நம்பிக்கையின்படியே உனக்கு நிகழ்ந்தது என்று கூறியதை பல இடங்களில் பார்க்கிறோம். அதையொத்த ஒரு நிகழ்வை இன்று நாம் நோக்குவோம்.

இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர், “தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம், ஐயா” என்றார்கள். பின்பு, அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி. “யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால், அவர்கள் வெளியேபோய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள் (மத் 9 27-31).

இயேசு செய்த அருங்குறிகள் பலவற்றுக்கும் அடிப்படை, நலம் பெற்றவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை. பல நேரங்களில் நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் என்று சொல்கிறார் இயேசு. எனவே, யாரிடம் நம்பிக்கை இருக்கிறதோ, அவர்களிடையே மட்டுமே அவர் அற்புதங்கள் செய்தார். இயேசுவின் சொந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்தபோது, அவர்கள் அவரை மெசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை, அவர்மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு இயேசு வியப்புற்றார். அது மட்டுமல்ல, அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை (மாற் 6:5) என்னும் வித்தியாசமான, கொஞ்சம் துணிச்சலான செய்தியைப் பார்க்கிறோம். எனவே, நம்பிக்கை இருக்கிறர்களுக்கு மட்டுமே வியப்புக்குரிய செயல்களை இறைவன் செய்கிறார்.

கடவுளின் அன்பு பற்றி அறிவித்த இயேசு அந்த அன்பு, மக்களின் துன்பத்தைப் போக்குவதைச் செயல்முறையில் காண்பிக்கிறார். இயேசுவை தாவீதின் மகன் என அழைத்து மெசியா என அடையாளம் கண்ட அந்த இருமனிதரும் உண்மையிலேயே புறப் பார்வையற்றவர்களாக இருந்தாலும் அகப்பார்வை கொண்டிருந்தார்கள் என்பதை மத்தேயு நற்செய்தியில் காண்கிறோம்.

இயேசுவை மெசியா என அழைத்த அந்த இரு மனிதர்களுக்கும் இயேசுவிடமிருந்து தங்களுக்குப் பார்வை கிடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததை இயேசுவால் அளிக்க முடியும் என அவர்கள் உண்மையாகவே நம்ப வேண்டும் என்பதுதான் இயேசுவின் கோரிக்கை. அந்த மனிதர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. இயேசு அவர்களின் கண்களைத் திறக்கின்றார். பார்வை பெற்ற மனிதர்கள் ஒருவிதத்தில் புது வாழ்வு பெற்றார்கள் எனலாம்.

நம் உள்ளத்தில் உறுதி இருக்கும்போது நடக்கவியலாது என நாம் நினைப்பதும் நடப்பதுண்டு. நம் உள்ளத்தில் உறுதியற்ற நிலை தோன்றிவிட்டால் நாம் வெற்றியடைய இயலாது என்னும் எதிர்மறை எண்ணம் நம்மில் வேரூன்றி, நம் உறுதிப்பாட்டைக் குலைத்துவிடும். அந்த வேளைகளில் நம் முயற்சி வெற்றிதராமல் போய்விடுவதுண்டு. இது மனித வாழ்வில் நாம் பெறும் அனுபவம். ஆனால், கடவுளை அணுகிச் செல்வோர் கடவுளின் கைகளில் தங்களையே முழுமையாகக் கொடுத்துவிடுவதால் வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். தமக்கு வெற்றியாகத் தோன்றுவது உண்மையில் தோல்வியாகவும், தோல்வியாகத் தோன்றுவது உண்மையில் வெற்றியாகவும் மாறிடக் கூடும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

“தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்”(மத் 9:28) என கத்திக்கொண்டே அவர்கள் இயேசுவின் வீடுவரை வந்துள்ளனர். நம்பிக்கை என்பது ஓர் இலக்கை நோக்கி இறுதிவரைப் போராடும் பண்பு. ஒருமுறை அல்லது இருமுறை குரல் எழுப்பி அதன்பின் அசந்துவிடுவது அவநம்பிக்கையின் வெளிப்பாடு. ஆனால் பார்வையற்ற அவ்விருவரும் குரல் எழுப்பிக்கொண்டு, சிரமம் பாராமல் இயேசுவின் வீடுவரை வந்துள்ளனர். இது நம்பிக்கையின் உச்ச கட்டம். நம்பிக்கை என்பது, ஆண்டவரை முற்றிலும்  சார்ந்து கொள்ளுவதாகும். அது ஆழமான நம்பிக்கை, முழுவதுமாக  அர்ப்பணிப்பு, இறுதிவரை உறுதியாக இருக்கும் தன்மை.

பார்வையற்றோர் இருவரையும் தம்மிடம் வரவழைத்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்கின்றார் இயேசு.

இயேசு அவர்கள் இருவரிடமும் இவ்வாறு கேட்பதற்கு முதன்மையான காரணம், இயேசு மக்கள் நடுவில் வல்ல செயல்களைச் செய்ததற்கும் செய்யாததற்கும் நம்பிக்கை என்பது முக்கியக் காரணமாக இருந்தது என்பதால்தான். நாசரேத்தில் இருந்த மக்களிடம் இயேசு வல்ல செயல்களைச் செய்யாதற்குக் காரணம், அவர்களிடம் நம்பிக்கை இல்லாததாலேயே (மாற் 6:5). ஆனால், நற்செய்தியில் வருகின்ற பார்வையற்ற இருவரிடமும் நம்பிக்கை இருந்தது. அதை அவர்கள் சொல்லக்கூடிய, “ஆம், ஐயா” என்ற வார்த்தைகளிலிருந்தே நாம் அறிந்துகொள்ளலாம்.

ஆனால், இயேசுவின் உறவினரும் சரி, சீடர்களும் சரி, ஊர் மக்களும் சரி, இயேசுவை யார் என அடையாளம் காணத் தவறிவிட்டார்கள். தீய ஆவிகள்தாம் இயேசுவை அடையாளம் கண்டு, அவரை ”உன்னத கடவுளின் மகன்” (மாற் 5:7) என அழைக்கின்றன. அவரோடு வழிநடந்து அவருடைய போதனைக்குச் செவிமடுத்த சீடர்கள் கூட அவரை அறிந்திடவில்லை. உள்வட்டத்தில் இருப்போர் பார்வையற்றிருக்க, வெளிவட்டத்தில் இருப்போர் தெளிந்த பார்வையோடு இயேசுவை அடையாளம் காண்கிறார்கள்.

திருத்தூதர்கள் ஆண்டவரிடம், ‘ எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்’ என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: ‘ கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘ நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.  

இயேசுவின் வாழ்வில் சீடர்களோடு நடந்த ஒரு நிகழ்வை எடுத்துக்கொள்வோம். ஒரு நாள் சீடர்கள் சென்ற படகு கரையிலிருந்து நெடுந்தொலைவு சென்றபிறகு, வேகமாக வீசிய காற்றில் படகு தத்தளித்தது. நள்ளிரவு கடந்து இன்னும் விலகாத இருளில், இயேசு கடல் மீது நடந்து அவர்களைத் தேடிச் சென்றார். ஏதோ ஓர் உருவம் கடல் மீது நடப்பதைக் கண்ட அவரது சீடர்கள் அஞ்சி, “ஐயோ, பேய்!” என்று அலறினர். உடனே இயேசு, “துணிவோடிருங்கள். நான்தான். அஞ்சாதீர்கள்!” என்றார். அவரின் தலைமைச் சீடரான பேதுரு, “நீர்தான் என்றால் கடல் மீது நான் நடந்து வர ஆணையிடும்” என்றார். இயேசு “வா!” என்றார். ஆனால் நடந்தது என்ன?. ஐயம் எழும்பியபோது மூழ்கத் துவங்கினார் பேதுரு.

அதேவேளை, நூற்றுவர் படைத்தலைவனின் விசுவாசத்தைப் பார்த்தும், கனானியப் பெண்ணின் விசுவாசத்தைக் கண்டும், பலகாலமாக இரத்தப்போக்கு நோயால் அவதியுற்ற பெண்ணின் நம்பிக்கையை நோக்கியும் வியந்து போகிறார் இயேசு. அதையொத்ததுதான்  இன்று நாம் காணும் இரு பார்வையற்றோரின் பதிலும்.   ஆம், ஐயா என உறுதிபடக் கூறுகின்றனர் அவர்கள்.

நம்வாழ்வில் நடப்பதென்ன? நாம் பல வேளைகளில் தடுமாறும் ஒரு விஷயம் நம்பிக்கை. கடவுளிடம் முழுமையாய் நம்பிக்கையை வைப்பதில் தடுமாற்றம். எந்த ஒரு செயலும் சரியாக அமையவேண்டுமென்றால் அதை தானே முன்னின்று நடத்தவேண்டும் என்னும் எண்ணம். கடவுளிடம் ஒப்படைப்பதில் வரும் தயக்கம். இந்த நம்பிக்கையின்மை தான் வாழ்வில் நாம் பல வெற்றிகளை அடைவதற்கு இடையூறாகவும், பல தோல்விகளை வெற்றிகள் என்று நாம் கருதிக் கொள்வதற்கு ஏதுவாகவும் அமைந்து விடுகிறது.

மருத்துவர்கள் கைவிட்டு விட்டார்களே இனிமேல் என்னைக் காப்பாற்ற யாரால் முடியும்? என்று சொல்வோமே தவிர, கடவுளால் அது முடியும் என்னும் நம்பிக்கையை வைக்க நம்மால் முடிவதில்லை. ஏன் ?

‘அசைக்க முடியாத நம்பிக்கை உன்னிடம் இருந்தால் இந்த மலையைப் பார்த்து பெயர்ந்து போய் கடலில் விழு என்று சொன்னால் விழும்’ என்கிறார் இயேசு. ஆனால் யார் சொல்லியும் மலை நகரவில்லை. காரணம் அது நகரப்போவதில்லை என்று நாம் நமக்குள் எழுதி வைத்திருக்கும் நம்பிக்கை.

‘உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கியது’ என்று இயேசு பலமுறை சொல்கிறார். ‘நீ நலம்பெற முடியும் என்று நம்புகிறாயா?’ என்றுதான் முதலில் கேட்கிறார். நம்பிக்கையில்லாவிடில் நீ அதிசயங்களைக் காணமுடியாது என்று தெள்ளத் தெளிவாக எச்சரிக்கையும் விடுக்கிறார். பேதுரு இயேசுவை நம்பியபோது கடல்மீது நடந்தார். அந்த நம்பிக்கை தளர்ந்தவுடன் தண்ணீரில் மூழ்கினார்.

”நம்பிக்கை என்பது உண்மையாக இருக்கவேண்டும். வேறு வழியில்லாமல் நம்புவது என்பது நிலையில்லாதது. அந்த நம்பிக்கை எப்போது வேண்டுமானாலும் அவநம்பிக்கையாக மாறிவிடும்”.  பேய் பிடித்திருந்த சிறுவனைக் குணமாக்கிய பொழுது (மத் 17:14-21) சீடர்கள் ” எங்களால் ஏன் பேய் ஓட்ட இயலவில்லை” என்பதற்கு இயேசு,

”உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம்” என்கிறார். நம்பிக்கை ஆவியானவரின் கொடைகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

ஆதிகால கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கை அளவிட முடியாதது. நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி, கண்ணுக்குப் பலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி 11:1). மெசப்பத்தோமியாவில் உள்ள “ஊர்”(UR) என்னும் ஊரிலிருந்து புறப்பட்டாரே ஆபிரகாம், அது நம்பிக்கை. 90 வயதிலும் தமக்குக் குழந்தை பிறக்கும் என்ற விசுவசித்தவர் தன் ஒரே மகன் ஈசாக்கை பலி கொடுக்கத் துணிந்ததும் நம்பிக்கை. அவரைத்தான் நாம் விசுவாசத்தின் தந்தை என அழைக்கிறோம்.

புனித பவுல் கூறுவதுபோல், “நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்”(எபி 12:2).

By Kudanthai Gnani

Father Kudanthai Gnani is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.