திருத்தந்தை பிரான்சிஸ் தெலுங்கானாவில் உள்ள வாராங்கல் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றி வரும் ஆயர் உடுமலா பால சௌரிரெட்டி (70) அவர்களை ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் உயர் மறைமாவட்டத்தின் ஆயராக நியமித்துள்ளார். ஏப்ரல் 13, 2013 அன்று வாரங்கல் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு, மே 23, 2013 அன்று ஆயராக திருப்பொழிவுச் செய்யப்பட்டார். கம்மம் மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக 2022 ஆம் ஆண்டு முதல் 2024 வரை பணியாற்றினார். 2006 முதல் 2013 வரை இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் துணை பொதுச் செயலாளராக பணியாற்றிய இவர், ஆயரான பிறகு 2015 முதல் 2023 வரை இந்திய ஆயர் பேரவையின் இறையழைத்தல், குருமடங்கள், குருக்கள் மற்றும் துறவியர் பணிக்குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.

ஜூன் 18, 1954 அன்று வாரங்கல் மறைமாவட்டத்தில் உள்ள கன்பூர் – கூடுர் என்னுமிடத்தில் பிறந்த இவர், தொடக்கக் கல்வியைத்தம்சொந்த ஊரில் முடித்த பிறகு, வாரங்கல் புனித கபிரியேல் உயர் நிலைக் கல்வி கற்றார். தம் கல்லூரிப் படிப்பை உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் முடித்து இவர், தம் குருத்துவப் பயிற்சியை ஹைதராபத் ரமந்தாபூரில் உள்ள புனித ஜான் வட்டாரக் குருமடத்தில் இறையியல் முடித்து பின், பிப்ரவரி 20, 1979 அன்று குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1990-1994 வரை உரோமையில் ஒழுக்க இறையியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், 1994- 1997 வரை பேராசிரியராகவும் பின்னர் குருமட அதிபராகவும் புனித ஜான் வட்டாரக் குருமடத்தில் பணியாற்றினார்.
பிப்ரவரி 14, 2024 முதல் விசாகப்பட்டினம் பேராயர் பிரகாஷ் மல்லவரப்பு ஓய்வுப் பெற்ற பிறகு, அம்மறைமாவட்டம் ஆயரின்றி இருந்தது.
தற்போது வாராங்கல் ஆயர் மேதகு பால சௌரிரெட்டி அவர்களின் நியமனம் அவ்வுயர் மறைமாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ரெட்டி என்ற சாதிப்பெயரை பேராயர் தவிர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
தமிழகத்திலும் மதுரை உயர் மறைமாவட்டம் மேதகு ஆயர் பாப்புசாமி அவர்களின் ஓய்வுக்குப் பிறகு, பாளை மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள் மதுரை உயர் மறைமாவட்ட நிர்வாகியாக நியமிக்கப்பட்ட பிறகு நிர்வாகத்தில் இருந்து வருகிறது என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.