நீடித்த நட்பின் உணர்வில், குறிப்பாக தாய்லாந்தில் உள்ள கத்தோலிக்கத் திருஅவையுடன் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வளர்க்க உங்களை ஊக்குவிக்கிறேன் : திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்று மானுடமும் நமது பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியும் உண்மையில் காயப்பட்டிருக்கின்றன! எத்தனையோ போர்கள், அனைத்தையும் இழந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் எத்தனையோ பேர். பல குழந்தைகள் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தனது கவலையை வெளிப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 27, இத்திங்களன்று, தாய்லாந்திலிருந்து வந்திருந்த புத்தமதத் துறவியரின் பிரதிநிதிகள் குழுவொன்றை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, ஆயினும்கூட, நீங்கள் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டியது போல், பல்வேறு சவால்களுக்கு மத்தியில், அந்தந்த மத மரபுகளில் ஆழமாக வேரூன்றியவர்களும், அனைவருடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பவர்களும் நம்பிக்கையின் கதிரை நம்பிக்கையிழந்த இந்த மனிதகுலத்திற்குக் கொண்டு வர முடியும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம் என்றும் கூறினார்.
உங்களது கலந்துரையாடலின்போது, நான் மீண்டும் வலியுறுத்த விரும்பும் மூன்று முக்கிய விடயங்களை நீங்கள் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளீர்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மூன்று காரியங்கள் குறித்து அவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
தனித்த நிலையில் மீட்பு இல்லை
முதலில், யாரும் தனித்த நிலையில் மீட்கப்பட முடியது என்றும், நாம் ஒருவருடன் ஒருவர் இணைந்திருப்பதாலும், ஒருவரையொருவர் சார்ந்திருப்பதாலும் நாம் ஒன்றிணைந்த நிலையில் மீட்கப்பட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் திருத்தந்தை.
இந்த உண்மையின் ஒளியில் அமைதியையும் உடன்பிறந்த உறவையும் நிலைநிறுத்தும் நட்பை மேம்படுத்துவதற்கு குடிமைச் சமூகம், பிற மதங்களைச் சேர்ந்தவர்கள், அரசுகள், அனைத்துலக அமைப்புகள், கல்வி மற்றும் அறிவியல் சமூகங்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைத்துத் தரப்பினரும் இணைந்து பணியாற்றுமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
இளையோர் மற்றும் குழந்தைகளுக்குக் கல்வி
இரண்டாவதாக, ஒருவருக்கொருவர் மற்றும் சுற்றுச்சூழலுடன் அக்கறை, மற்றும் உறவுகளைப் பகிர்ந்துகொள்வதில் அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் கல்வி கற்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் வலியுறுத்தினீர்கள் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அதில் தான் உடன்பட்டிருப்பதாகவும், இதனையே தானும் வலியுறுத்த விரும்புவதாகவும் கூறினார்.
மனதையும் இதயத்தையும் தூய்மையாக்கும் செபம் மற்றும் தியானம்
மூன்றாவதாக, இறைவேண்டலும் தியானமும் மனதையும் இதயத்தையும் சுத்திகரித்து தூய்மையாக்குவது போன்று, அவைகள் அன்பான இரக்கம், பரிவு மற்றும் மன்னிப்பு ஆகியவற்றை உருவாக்குகின்றன என்றும், அச்சூழலில் அங்கு வெறுப்பும் பழிவாங்கும் உணர்வும் மாற்றம்பெற்று, மற்றவர்கள் மற்றும், இப்பூமியின்மீதான மரியாதை மற்றும் அக்கறையின் உணர்வை உருவாக்குகிறது என்றும் விளக்கினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்