திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மருத்துவ சிகிச்சைகளுக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கின்றார் என்றும், அவர் இன்னும் முழுவதுமாகக் குணமடையவில்லை என்றபோதிலும், ஆபத்தின் எல்லையைத் தாண்டவில்லை என்றும் ஜெமெல்லி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் செர்ஜியோ அல்ஃபியேரி எடுத்துரைத்தார்
பிப்ரவரி 21 வெள்ளிக்கிழமை மாலை, உரோம் ஜெமெல்லி மருத்துவமனையின் அறுவை சிகிச்சைத் துறையின் இயக்குநரும் ஜெமெல்லி குழுவின் தலைவருமான செர்ஜியோ அல்ஃபியேரி, வத்திக்கான் நகர நலவாழ்வு இயக்குநரகத்தின் துணை இயக்குநரும் திருத்தந்தையின் சிறப்பு மருத்துவருமான லூயிஜி கார்போன், திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயு புரூனி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருத்தந்தையின் உடல்நலம் குறித்த தகவல்களைப் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கியபோது இவ்வாறு எடுத்துரைத்தனர்.
திருத்தந்தையின் உடல்நலம் குறித்துப் பரப்பப்பட்டு வரும் தவறான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்த மருத்துவர்கள், திருத்தந்தை உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கின்றது என்றும், அவர் தனது அன்றாடப் பணிகளை ஆற்றுகின்றார், நாளிதழ்களை வாசிக்கின்றார், நகைச்சுவையுடன் உரையாடுகின்றார் என்றும் எடுத்துரைத்தனர்.
திருத்தந்தை குறித்து திருப்பீடச்செய்தித் தொடர்பகம் இதுவரை வழங்கிவந்த செய்திகள் யாவும் மருத்துவக்குழுவின் ஒப்புதலின்படியே மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன என்றும், தனது உடல்நலம் குறித்த நம்பகத்தன்மைகொண்ட தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும் என்பதையே திருத்தந்தையும் விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.
நுரையீரல் அழற்சி நோய்த் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சைகளைத் தொடர்ந்து பெற்று வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வயது முதிர்ந்த நிலையிலும் அவர் மிகுந்த மன வலிமையுடன் மருத்துவ சிகிச்சைகளுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கின்றார் என்றும் கூறினர்.
88 வயதுடைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடலளவில் பலவீனமானவர் என்று கருதப்பட்ட போதிலும், அவரது எண்ணம் 60 வயது மதிக்கத்தக்கவர் போன்று இருக்கின்றது என்றும், அவர் மிகுந்த மன வலிமையுடையவராக இருக்கின்றார் என்றும் எடுத்துரைத்த மருத்துவர்கள், திருத்தந்தைக்குத் தொடர் மருத்துவ சிகிச்சைகள் இன்னும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படலாம் என்றும், தீவிர சிகிச்சைத் தொடர்ந்து அளிக்கப்பட இருக்கின்றது என்றும் கூறினார்.
திருத்தந்தை முழுவதுமாகக் குணம்பெற்ற பின்னரே மருத்துவமனையிலிருந்து சாந்தா மார்த்தா இல்லம் திரும்புவார் என்றும், எந்தவிதமான செயற்கைக் கருவிகளின் துணையின்றி இயல்பாக சுவாசிக்கின்றார், படுக்கையிலிருந்து எழுந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்து நாளிதழ்களைப் படிக்கின்றார், நகைச்சுவை உணர்வு குறையாமல் உரையாடுகின்றார் என்றும் எடுத்துரைத்தனர்.
மேலும் அவர் எப்போதும் திருஅவைச் சார்ந்த விடயங்களைக் குறித்துச் சிந்தித்துச் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றார் என்றும் குறிப்பிட்ட ஆவணங்களில் கையெழுத்திடுகின்றார் என்றும் எடுத்துரைத்த மருத்துவர்கள், நுரையீரலில் நுண்ணிய பாக்டீரீயா கிருமிகளின் தாக்கத்தால் அவருக்கு இடையிடையே மூச்சுத்திணறல் ஏற்படுகின்றது என்றும் தெரிவித்தனர்.