கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து மதச் சிறுபான்மையினர் நம்பிக்கை அடிப்படையிலான வன்முறையை எதிர்கொண்டுள்ளனர் என்ற “தவறான” கூற்றுகளை வங்காள தேச அரசு நிராகரித்துள்ளதாகக் கூறியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.
இந்நிலையில் இக்குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த அந்நாட்டுச் செய்தித் துறையின் துணைச் செயலாளர் ஆசாத் மஜூம்டர் அவர்கள், “முஹம்மது யூனுஸ் தலைமையிலான முஸ்லீம் பெரும்பான்மை தேசத்தின் இடைக்கால அரசு, எந்தவிதமான வன்முறையையும் ஆதரிக்காது” என்று பிப்ரவரி 3, இத்திங்களன்று, இச்செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளையில், கடந்த ஜனவரி 30, வியாழக்கிழமையன்று, டாக்காவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 முதல் டிசம்பர் 30 வரை, மதச் சிறுபான்மையினர் 174 மதவெறி வன்முறைச் சம்பவங்களை எதிர்கொண்டனர் என்றும், இதில் 23 பேர் கொல்லப்பட்டனர் என்றும் இச்சிறுபான்மையினர் அமைப்பு குற்றம் சுமத்தியது என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
மேலும் இரண்டு மாத கால நாடு தழுவிய மக்களின் எழுச்சிக்குப் பின்னர், கடந்த 2024-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி, திங்கள்கிழமையன்று, ஹசீனா மற்றும் அவரது அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மதச் சிறுபான்மையினர் வன்முறையை எதிர்கொள்ளத் தொடங்கினர் என்று இச்சிறுபான்மை அமைப்பு சுட்டிக்காட்டியதையும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்திக் குறிப்பு.
ஹசீனா வெளியேற்றப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, இச்சிறுபான்மையினர் அமைப்பு இதேபோன்றதொரு குற்றச்சாட்டை முன்வைத்தது என்றும், 2024-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை, அதாவது, ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, கொந்தளிப்பான இரண்டு வார காலத்தில், மதச் சிறுபான்மையினர் 2,010 வன்முறைச் சம்பவங்களில் குறிவைக்கப்பட்டதாக அவ்வாண்டு செப்டம்பர் 19 அன்று, ஊடகங்களுக்குத் தெரிவித்தது என்பதையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
இந்நிலையில், அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், “இது தேவையற்ற வகுப்புவாத வன்முறைகளுக்கு இட்டுச்செல்லும்” என்று கூறியுள்ள அதேவேளையில், “விசாரணை மூலம் எங்களின் இந்தக் கூற்று தவறு என்று நிரூபிக்க இடைக்கால அரசை நாங்கள் அழைக்கிறோம்” என்று இவ்வமைப்பின் தற்காலிகப் பொதுச் செயலாளர் மொனிந்திர குமார் நாத் அவர்கள் கூறியதாகவும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மிகப்பெரிய மதச் சிறுபான்மையினரான இந்துக்கள், 7.95 விழுக்காட்டையும், பெளத்தர்கள் 0.61 விழுக்காட்டையும், கிறிஸ்தவர்கள் 0.30 விழுக்காட்டையும் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது (UCAN)