மதங்களிடையேயான கருத்துப்பரிமாற்றங்களுக்கான திருப்பீடத்துறையின் தலைவராக புதிய இந்திய கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் ஜனவரி 24 வெள்ளிக்கிழமையன்று நியமித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்திருப்பீடத்துறையின் தலைவர், கர்தினால் ஆயுசோ குயிஸோட் அவர்கள் இறைபதம் சேர்ந்ததையடுத்து தற்போது கர்தினால் கூவக்காட் அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர் ஏற்கனவே இருந்துவந்த, திருத்தந்தையின் வெளிநாட்டுத் திருப்பயணங்களின் ஒருங்கிணைப்பாளராகவும் தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
51 வயது நிரம்பிய கர்தினால் கூவக்காட் அவர்கள், 1973ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி கேரளாவின் சேத்திபுழா என்னுமிடத்தில் பிறந்து 2004ஆம் ஆண்டில் அருள்பணியாளராக திருப்பொழிவுச் செய்யப்பட்டார்.
சங்கணாச்சேரி மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர், திருப்பீடத்தூதுவர் பணியில் பயிற்சிப் பெற்று, அல்ஜீரியா, கொரியா, ஈரான், கோஸ்டா ரிக்கா, வெனிசுவேலா ஆகிய நாடுகளின் திருப்பீடத் தூதரகங்களில் பணியாற்றியபின் 2020ஆம் ஆண்டிலிருந்து திருப்பீடச் செயலகத்தின் பொதுவிவகாரத்துறையில் பணியாற்றி வந்தார்.
திருத்தந்தையின் வெளிநாட்டுத் திருப்பயணங்களை ஒருங்கிணைக்கும் பணிக்கென 2021ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்ட கர்தினால் கூவக்காட் அவர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதி கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வெள்ளிக்கிழமையன்று, மதங்களிடையேயான கருத்துப்பரிமாற்றங்களுக்கான திருப்பீடத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கர்தினால் கூவக்காட் அவர்கள், வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வெள்ளியன்று வழங்கிய நேர்முகத்தில், மிகப்பிரபலமான கர்தினால்கள் அயுசோ மற்றும் தவ்ரான் ஆகியோர் வகித்த பதவியில் தான் நியமிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தாலும், பெரும் பொறுப்புணர்வையும் அது குறித்து நிற்கிறது என்றார்.
தான் மேற்கொள்ளவுள்ள பணிகள் பற்றிக் குறிப்பிட்ட கர்தினால் கூவக்காட் அவர்கள், ஒருவரின் தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் தக்க வைத்துக்கொள்வது என்பது, சுவர்களை எழுப்புவதையோ மற்றவர்களை பாகுபாட்டுடன் நடத்துவதையோ குறிக்கவில்லை, மாறாக, பாலங்களை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக நோக்கப்பட்ட வேண்டும் என மேலும் கூறினார்.