புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் மற்றும் மாண்பை பாதுகாப்பதற்கான அமெரிக்க ஆயர்களின் முயற்சிகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் .
பிப்ரவரி 10, திங்கள்கிழமையன்று எழுதியுள்ள இந்தக் கடிதத்தில், புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கு ஆதரவான அமெரிக்க ஆயர்களின் நிலைப்பாட்டை பாராட்டியுள்ளதுடன், இடம்பெயர்வை எதிர்கொள்பவர்களுக்கு மேய்ப்புப் பணிக்கான அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
தனது கடிதத்தில், திருக்குடும்பம் எகிப்திற்குப் புலம்பெயர்ந்து சென்றதை நினைவு கூர்ந்துள்ள திருத்தந்தை, அத்திருக்குடும்பத்தின் அனுபவத்திற்கும் இன்று பல புலம்பெயர்ந்தோரின் அனுபவத்திற்கும் இடையே நிலவும் ஒத்த கருத்துக்களையும் எடுத்துக்காட்டியுள்ளார்.
“திருக்குடும்பத்தின் பயணம், ‘வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணமாக இடம்பெயர்தல் நிகழ்வின்’ சூழலை பிரதிபலிக்கின்றது” என்றும், “கடவுள் மீதான நமது நம்பிக்கையை மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதரின் எல்லையற்ற மற்றும் உன்னதமான மாண்பையும்” மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார் .
திருத்தந்தை 12-ஆம் பயஸ் அவர்களின் புலம்பெயர்ந்தோர் பராமரிப்பு குறித்த திருத்தூது அமைப்புவிதித் தொகுப்பினை (apostolic constitution) சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, இது பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை நாடும் புலம்பெயர்ந்தோருக்குத் திருக்குடும்பத்தை ஒரு முன்மாதிரியாக விவரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, “புலம்பெயர்ந்தோரைப் பாதுகாப்பதில் உங்கள் பணி, கிறிஸ்துவின் பணியிலும் திருஅவையின் வரலாற்றிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது” என்றும் மொழிந்துள்ளார்.
திருத்தந்தையின் 10 அம்ச கருத்துக்கள்
அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்பின் கீழ் தொடங்கப்பட்ட பெருந்திரள் மக்களை நாட்டுவிட்டு வெளியேற்றும் திட்டம் குறித்து அமெரிக்க ஆயர்களுக்குப் பத்துவிதமான கருத்துக்களை திருத்தந்தை விரிவாக விளக்கியுள்ளார்.
இதில் அமெரிக்க குடியேற்றக் கொள்கைகளின் சிக்கல்களைத் தான் ஒப்புக்கொள்வதாகக் கூறியுள்ள அதேவேளையில், நீதிக்கான ஒரு சமூகம் என்பது, அதனின் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதன் மூலம் அளவிடப்படுகிறது என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
புலம்பெயர்ந்தோரைக் குற்றமாக்குவதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளமைக்காக அமெரிக்க ஆயர்களைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, புலம்பெயர்ந்தோருக்கான விதிமுறைகள் மனித மாண்பிற்கு மதிப்பளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
திருஅவையின் பணியை வலுப்படுத்துதல்
கிறிஸ்தவ அன்பு என்பது அனைத்துத் தனிநபர்களின் மாண்பையும் அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, சட்ட தகுதிநிலையை (legal status) பொருட்படுத்தாமல், ஓரங்கட்டப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் மற்றும் காப்பாற்றும் முயற்சிகளுக்கு கடவுள் தகுந்த வெகுமதி அளிப்பார் என்று உறுதியளித்துள்ளார்.
சமூக மற்றும் அரசியல் அழுத்தங்கள் உட்பட சவால்கள் இருந்தபோதிலும் அர்ப்பணிப்புடன் இருக்குமாறு அவர்களிடம் விண்ணப்பித்துள்ள திருத்தந்தை, ஒன்றிப்பு மற்றும் இரக்கத்தை ஊக்குவிக்குமாறு அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளதுடன், ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒளியாகத் திகழ்வதற்கான அவர்களின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலம்பெர்ந்தோருக்கான திருஅவையின் பணியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள திருத்தந்தை, உண்மையான கிறிஸ்தவ அடையாளம் என்பது, உடன்பிறந்த உறவு மற்றும் மனித மாண்பைப் பாதுகாப்பதில் அடங்கியுள்ளது என்பதை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீதியான சமுதாயத்தை உருவாக்குவதில் அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து அனைவரையும் வழிநடத்த அமெரிக்க ஆயர்களுக்கு திருத்தந்தை அழைப்புவிடுத்துள்ளார்.
வலிமை மற்றும் வழிகாட்டுதலுக்கான இறைவேண்டல்
இறுதியாக, அந்நாட்டு ஆயர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை குவாதலூப்பே அன்னை மரியாவிடம் ஒப்படைத்து, உடன்பிறந்த உறவையும் மனித மாண்பையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயம் உருவாகிட இறைவேண்டல் செய்து தனது கடிதத்தை திருத்தந்தைநிறைவு செய்துள்ளார் .