திருவழிபாடு மற்றும் திருச்சடங்குகளின் ஒழுங்குமுறைக்கான திருப்பீடத் துறை, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதியன்று கொண்டாடப்படும் இந்தியாவின் கொல்கொத்தா நகர் அன்னை தெரேசாவின் திருவிழா உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைக்கப்பட்டுள்ளது குறித்த ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமையன்று, இந்த ஆணையை வெளியிட்டுள்ள இத்திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Arthur Roche அவர்கள், “புனித அன்னை தெரேசா, கைவிடப்பட்டவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் “அன்னை தெரேசா உயரத்தில் சிறியவராக இருந்தாலும் அன்பை வழங்குவதில் மிகவும் மகத்தானவராக இருந்தார்” என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் Arthur Roche அவர்கள், “கருவறையில் கூட கைவிடப்பட்ட, நிராகரிக்கப்பட்ட மற்றும் இகழ்ந்தொதுக்கப்பட்ட அனைத்து மனித உயிர்களையும் பாதுகாப்பதில் பணிவான சேவையின் மாண்பு மற்றும் சிறப்புக்குச் சான்றாக விளங்கினார்” என்றும் உரைத்துள்ளார்.
“ஆயர்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலை விசுவாசிகளின் வேண்டுகோள்களுக்குப் பதிலளிக்கும் வகையில், அன்னை தெரேசாவின் திருவிழாவை உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைக் கேட்டுக்கொண்டார்” என்றும் கர்தினால் Roche கூறியுள்ளார்
“அன்னை தெரேசாவின் புனிதமும் ஆன்மிகமும், வாழ்க்கையில் கைவிடப்பட்டவர்களின் நம்பிக்கைக்கு சிறந்ததொரு சான்றாக வெளிப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் Roche அவர்கள், “கடந்த 2016-ஆம் ஆண்டு, செப்டெம்பர் 4,-ஆம் தேதியன்று, அன்னை தெரேசாவைப் புனிதர் நிலைக்கு உயர்த்தும் திருச்சடங்கின்போது, ‘நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளைப் போக்கும் இறை இரக்கத்தின் வழித்தடம் அன்னை தெரேசா’ என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைத்ததையும் நினைவுகூர்ந்துள்ளார்.
இந்த ஆணை, அந்நாளுக்குரிய திருவழிபாட்டு ஆவணங்கள் (இலத்தீன் மொழியில்) திருப்புகழ் மாலை மற்றும் திருப்பலிக் கொண்டாட்டங்களின்போது இறைவேண்டல் செய்வதில் விசுவாசிகளுக்கு வழிகாட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அன்னை தெரேசாவின் திருவிழா (செப்டம்பர் 5-ஆம் தேதி) ஒரு விருப்ப வழிபாட்டு நினைவாக (an optional liturgical memorial) ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்றும் அவ்வாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.