திர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டில் இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு என்ற தலைப்பில் வழங்கி வரும் புதன் மறைக்கல்வி உரையில் இன்று, பெத்லகேமில் இயேசுவின் பிறப்பு குறித்தக் கருத்துக்களைக் காண்போம் என்று எடுத்துரைத்தார். தொடர் இருமல், சளி காரணமாகத் தன்னால் மறைக்கல்வி உரை கருத்துக்களை எடுத்துரைப்பது எளிதானதல்ல என்று திருப்பயணிகளுக்குத் தெரிவித்து, அவருக்குப் பதிலாக பேரருள்திரு பியர்லூயிஜி ஜிரோலி மறைக்கல்வி உரைக் கருத்துக்களை வாசிக்கக் கேட்டுக்கொண்டார். அதன்படி பேரருள்திரு பியர்லூயிஜி ஜிரோலி அவர்கள், கடந்த வாரத்தைப்போலவே இந்த வாரமும் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு வாசித்தார்.
திருத்தந்தையின் மறைக்கல்வி உரைச் சுருக்கம்
அன்பான சகோதர சகோதரிகளே காலை வணக்கம், இறைமகன் வரலாற்றில் நுழைந்து நமது வாழ்வில் நம்முடன் பயணிப்பதைக் கருவில் இருக்கும்போதே ஆரம்பிக்கின்றார். லூக்கா நற்செய்தியாளர், மரியா கருவுற்றவுடன் நாசரேத்திலிருந்துப் புறப்பட்டு, செக்கரியா மற்றும் எலிசபெத்தின் வீட்டிற்குச் சென்றதாகவும், கருவுற்றக் காலம் நிறைவுறுகையில் நாசரேத்திலிருந்து புறப்பட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் காரணமாக பெத்லகேம் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். மரியாவும் யோசேப்பும் நாசரேத்திலிருந்து, தாவீதின் ஊராகிய பெத்லகேமிற்குச் செல்லக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அந்த தாவீதின் ஊரில் தான் யோசேப்பும் பிறந்தார். பல காலமாக எதிர்பார்க்கப்பட்ட மெசியா, உன்னத கடவுளின் மகன், கணக்கெடுப்பிற்கு அதாவது தனது பிறப்பு சாதாரண மனிதரைப்போல மக்கள் தொகையுடன் கணக்கெடுக்கப்படவும், எண்ணப்படவும் அனுமதிக்கின்றார். முழு உலகத்திற்கும் பொறுப்பாளராகத் தன்னைக் கருதும் பேரரசர் அகுஸ்து சீசரின் கட்டளைக்கு அடிபணிகின்றார்.
பெத்லகேம் என்றால் உணவின் இல்லம் என்று பொருள். அங்கு மரியாவின் மகப்பேறு நாள்கள் நிறைவுறுகின்றன. இயேசு பிறக்கின்றார். “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே° (யோவான் 6:51) என்பதற்கேற்ப இயேசு பிறக்கின்றார். கபிரியேல் வானதூதர், இறைமகன் இயேசு என்னும் மெசியாவின் பிறப்பின் மேன்மையை கன்னி மரியாவிற்கு எடுத்துரைக்கும்போது, °இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” (லூக்கா 1:32-33) என்று குறிப்பிடுகின்றார்.
இருப்பினும் இயேசு ஒர் அரசனைப்போல எந்தவிதமான முன்தயாரிப்பும், முன்னோடியும் இன்றி பிறக்கின்றார். மரியாவும் யோசேப்பும் பெத்லகேமில் உள்ள மாட்டுத்தொழுவத்தில் இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே, பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார் (லூக்கா2:6-7) என்று லூக்கா நற்செய்தியாளர் விவரிக்கின்றார். கடவுளின் மகனாகிய இயேசு அரச மாளிகையில் பிறக்கவில்லை. மாறாக, ஒரு சாதாரண வீட்டின் பின்புறம் உள்ள விலங்குகளுக்கான தொழுவத்தில் பிறக்கின்றார்.
இவ்வாறு நற்செய்தியாளர் லூக்கா, இறைமகனான இயேசு இவ்வுலகிற்குள் எதிரொலிக்கும் கோசங்கள் மற்றும் பிரகடனங்களுக்கு மத்தியில் வரவில்லை. மாறாக மனத்தாழ்ச்சியுடன் தனது பயணத்தை இவ்வுலகில் தொடங்குகிறார் என்று வலியுறுத்துகின்றார். இந்நிகழ்வின் முதல் சாட்சிகளாக சில இடையர்கள் இருக்கின்றனர். சிறிய கலாச்சாரம் கொண்ட ஆண்கள், விலங்குகளுடனேயே தொடர்ந்து பயணித்து அதனுடனேயே இருப்பதால் ஏற்படும் துர்நாற்றம் கொண்டவர்கள், சமூகத்தின் விளிம்புகளில் வாழ்பவர்கள் இடையர்கள். இருப்பினும் அவர்கள் ஆயனாகிய கடவுள் தம் மக்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்தும் மறைபொருளை அறிந்துகொள்கிறார்கள். அதனைப் பிறருக்கு எடுத்துரைக்கும் பயிற்சியினையும் பெறுகின்றார்கள்.
வரலாற்றில் இதுவரை எதிரொலித்திராத மிக அற்புதமான நற்செய்தியைப் பெறுபவர்களாக கடவுள் இடையர்களைத் தேர்ந்தெடுக்கிறார். வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” (லூக்கா 2:10-12). என்று கூறுகின்றார்.
மெசியாவைச் சந்திக்க செல்லும் இடம் ஒரு தீவனத்தொட்டி. பல காலமாக எதிர்பார்க்கப்பட்டவரும், இவ்வுலகைப்படைத்த இறைவனின் மகனுமாகிய மெசியாவிற்குப் பிறக்க ஓரிடம் இல்லை. மிகவும் எளிய, விலங்குகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உலகை மீட்கும் மெசியா நமக்காகப் பிறந்துள்ளார், அவரே மீட்பர், ஆயர் என்பதை இடையர்கள் அறிந்து கொள்கின்றார்கள். மகிழ்ச்சியான நற்செய்தியானது அவர்களது இதயங்களை, வியப்பு, புகழ்ச்சிப்பாடல் மற்றும் மகிழ்வினால் நிரப்புகின்றது.
“ஆயிரம் காரியங்களைச் செய்ய விரும்பும் பலரைப் போலல்லாமல், இடையர்கள் அடிப்படையானவற்றுக்கு, அதாவது, கொடையாகக் கொடுக்கப்படும் மீட்பிற்கு முதல் சான்றுகளாக மாறுகிறார்கள். கிறிஸ்துவின் மனிதப்பிறப்பு நிகழ்வை எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பதை அறிந்தவர்களாக, மிகவும் தாழ்ச்சியானவர்களாக, ஏழைகளாக இருக்கின்றனர் இடையர்கள்.
சகோதர சகோதரிகளே! இடையர்களைப் போல நாமும், கடவுளைக் கண்டு வியப்படையவும், அவரைப்போற்றிப் புகழவும், அவர் நம்மிடம் ஒப்படைத்தவைகளான நமது திறமைகள், தனிவரங்கள், அழைத்தல், நம் அருகில் இருக்கும் மக்கள் ஆகியோரைப் போற்றக்கூடியவர்களாக இருக்கவும் கடவுளின் அருளை நாம் கேட்போம். உலகைப் புதுப்பிக்கவும், அனைத்து மனிதகுலத்திற்கும் நம்பிக்கை நிறைந்த திட்டத்துடன் நம் வாழ்க்கையை மாற்றவும் குழந்தையாக நம்மிடத்தில் வரும் கடவுளின் அசாதாரண வலிமையை பகுத்தறியும் திறன் கொண்டவர்களாக இருக்க இறைவனிடம் அருள் கேட்போம்.
இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களைப் பேரருள்திரு பியர்லூயிஜி ஜிரோலி அவர்கள் வாசித்து நிறைவு செய்ததுதும் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை.
இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரினால் பாதிக்கப்படும் மக்களுக்காக செபிக்கக் கேட்டுக்கொண்டார். போர் எப்போதும் ஒரு தோல்விதான் என்பதை மறந்துவிடவேண்டாம். நாம் கொல்வதற்காக அல்ல. மாறாக. மக்களை வளர்த்தெடுப்பதற்காகவே இவ்வுலகில் பிறந்தவர்கள் என்பதை நினைவில் கொள்வோம். நமது அன்றாட செபத்தில் அமைதிக்காக சிறப்பாக செபிப்போம்.அமைதிஅயிபெறுவதற்கான எல்லாவற்றையும் செய்வோம்.
துன்புறும் உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், மியான்மார், வடக்கு கிவ், தென்சூடான் பகுதிகளில் வாழும் மக்களை நினைத்துப் பார்ப்போம். போரில் ஈடுபட்டுள்ள பல நாடுகளைப் பற்றி சிந்திப்போம். தயவுகூர்ந்து அமைதிக்காக செபிப்போம். அமைதிக்காக சில ஒறுத்தல் முயற்சிகள் செய்வோம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இறுதியாக, இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், ஸ்லாவிக் மக்களிடையே நம்பிக்கையைப் பரப்பிய முதல் புனிதர்களான சிரில் மற்றும் மெத்தோடியஸின் விழாவை பிப்ரவரி 14 வெள்ளியன்று திருஅவை சிறப்பிக்க இருக்கின்றது என எடுத்துரைத்து புனிதர்களின் சான்றுள்ள வாழ்வானது, நற்செய்தியின் திருத்தூதர்களாகவும், தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமூக வாழ்க்கையில் புதுப்பித்தலுக்கு உதவும் புளிக்காரமாகவும் நமக்கு இருக்கட்டும் என்றும் கூறினார்
இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்ததும் விண்ணகத் தந்தையை நோக்கிய செபமானது இலத்தீன் மொழியில் பாடப்பட்டது. அதன் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகளுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.