கடவுளையும் அயலாரையும் நோக்கிச் செல்லும் இவ்வுலகப் பயணத்திற்கு வழித்துணையாகவும், புகழ்ச்சி நிறைந்த செபமாகவும் மாநாடுகள் இருக்க வேண்டும் என்றும், நிறைந்த அன்பின் சாட்சிகளாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ்வலியுறுத்தினார் .
இஸ்பெயினிலுள்ள Seville நகரில் சிறப்பிக்கப்பட்ட ‘சகோதரத்துவம் மற்றும் புகழ்பெற்ற கடவுள்பற்று’ என்ற அமைப்பின் இரண்டாவது மாநாட்டின் பங்கேற்பாளர்களை திருப்பீடத்தில் பிப்ரவரி 8 சனிக்கிழமை சந்தித்தபோது இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார் .
அன்பின் எதிரொலிகள் குடும்பத்தில் கேட்கப்பட வேண்டும், கண்ணீரோடு வரும் இதயத்திலிருந்து எழும்பும் செபங்கள் கேட்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், சகோதரத்துவ அமைப்பு, இல்லங்கள், தலத்திருஅவைகள், பங்கு ஆலயங்கள், நோயாளிகள் மற்றும் முதியவர்கள் வாழுமிடங்கள் என அனைத்து இடங்களிலும் அன்பின் செயல்கள் எதிரொலிக்கப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
வீடற்றவர்களுக்கு இல்லம் அமைத்து தொண்டாற்றுவதன் வழியாக அன்பின் எதிரொலிப்புக்களைத் தொடர்ந்து அமைப்புக்கள் செயல்படுத்தி வருவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அன்பு செய்பவர்களின் இதயம் எடுத்துரைக்கும் உணர்வுகளை நமது இத்தொண்டுச்செயல்கள் வழியாக நாம் வெளிப்படுத்துகின்றோம் என்றும் கூறினார்.
மரியாதை, அன்பு, பாதுகாப்பு போன்றவை வீடற்றவர்களுக்கான இவ்வில்லங்களின் வழியாக மக்களுக்கு வழங்கப்படுகின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இதன் வழியாக சமூகமும், அதில் வாழும் மக்களும், ஒவ்வொரு நபருக்கும் உள்ள தனித்துவமான மாண்பை மீண்டும் அங்கீகரிக்க முடியும் என்பதை உறுதி செய்கின்றோம் என்றும் கூறினார்.