மனிதர்கள் வியாபாரப் பொருட்களாக கடத்தப்படுவதற்கு எதிரான ஆழ்ந்த சிந்தனை மற்றும் செபத்தின் 11வது உலக தினத்தையொட்டி ‘எதிர்நோக்கின் தூதுவர்கள்: மனித கடத்தலுக்கு எதிராக ஒன்றிணைதல்’ என்ற தலைப்பில் செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ்வெளியிட்டுள்ளார் .
குழந்தையாக இருக்கும்போதே சூடானில் கடத்தப்பட்ட அருள்சகோதரி புனித ஜோசபின் பகித்தா அவர்களின் திருவிழா அன்று, பிப்ரவரி 8, இந்த உலக நாள் கொண்டாட்டம் இடம்பெறுவது குறித்தும் தன் செய்தியில் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த யூபிலி ஆண்டில் நாம் அனைவரும், மனிதர் வியாபாரப்பொருட்களாகக் கடத்தப்படுவதற்கு எதிரான பாதையில் ‘எதிர்நோக்கின் திருப்பயணிகளாக’ நடைபோடுகிறோம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய நவீன அடிமைத்தனத்தில் பல இலட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், இளையோர், குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் சிக்குண்டிருக்கும்போது நாம் எப்படி எதிர்நோக்கு என்னும் நம்பிக்கையை வளர்க்க முடியும் என்ற கேள்வியை தன் செய்தியில் கேட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித உடல் உறுப்புக்களைக் கடத்தல், குழந்தைகள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் சுரண்டல், பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படல் உள்ளிட்ட காட்டாயத் தொழில்முறைகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுத கடத்தல்கள் போன்றவை எதிர்த்துப் போரிட எங்கிருந்து பலத்தைப் பெற முடியும் என்ற கேள்விகளையும் மேலும் கேட்டுள்ளார்.
இவைகளையெல்லாம் இவ்வுலகில் காணும் நாம் எவ்வாறு நம்பிக்கையிழக்காமல் வாழமுடியும் என்ற கேள்வியையும் கேட்டு, அதற்கான விடையாக, நாம் இயேசுவை நோக்கி நம் பார்வையை எழுப்பி அவரிடமிருந்து பலத்தைப் பெற்று, இருளை விலக்க உதவும் வெளிச்சத்தை தூண்ட உதவமுடியும் என மேலும் திருத்தந்தை கூறியுள்ளார்.
நாம் அனைவரும் எதிர்நோக்கின் தூதுவர்களாக செயலாற்றி, அநீதிகளையும் தீமைகளையும் அகற்றமுடியும் என்ற தன்னம்பிக்கையைப் பெற, மனிதர்கள் வியாபாரப் பொருட்களாக கடத்தப்படுவதற்கு எதிராக இளையோர் ஆற்றிவரும் பணிகள், நமக்கு உதவுகின்றன எனவும் தன் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார் .
மனித கடத்தலுக்கு உள்ளாக்கப்பட்டோரின் குரலுக்கு நாம் செவிமடுத்து, அவர்களுக்கு அருகிருந்து, கருணைகாட்டி அவர்கள் வாழ்வை மீட்டெடுக்க உதவுவதுடன், அவர்களுடன் இணைந்து மற்றவர்களை விடுவிக்கவும், இத்தகைய தீமைகள் மீண்டும் இடம்பெறாமலிருக்க உதவவும் வேண்டும் என திருத்தந்தை கேட்டுள்ளார்.
மனிதர் வியாபாரப் பொருட்களாக கடத்தப்படுவதற்கு, போர், மோதல்கள், பஞ்சம், காலநிலை மாற்றத்தின் விளைவுகள் என பல்வேறு கூறுகளும் காரணமாக இருக்கும் நிலையில், உலக அளவில் ஒன்றிணைந்த நடவடிக்கைகளின் அவசியத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் .