ரோமன் ரோட்டா எனப்படும், திருமணம் சார்ந்த விவகாரங்களுக்குப் பொறுப்பான, திருஅவையின் உச்ச நீதிமன்றம், நீதி ஆண்டைத் தொடங்குவதையொட்டி, அந்த நீதிமன்றத்தின் தலைவரான பேராயர் அலெக்சாந்திரோ அரேல்லானோ செடில்லானோ அவர்களையும், நீதிமன்றத்தின் 20 உயர்மட்ட அதிகாரிகளையும் ஜனவரி 31 வெள்ளிக்கிழமையன்று சந்தித்து 30 நிமிடங்கள் உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன்பின் அத்திருப்பீடத்துறையின் 400 உறுப்பினர்களையும் சந்தித்து உரையொன்று வழங்கினார்.
நீதித்துறை ஆண்டின் துவக்கமாக, ரோமன் ரோட்டா எனப்படும் திருமணம் சார்ந்த விவகாரங்களுக்குப் பொறுப்பான திருஅவையின் நீதிமன்றத்தின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் Motu Proprio என்னும் தன் சுயவிருப்பத்தின் பேரில் வெளியிட்ட Mitis Iudex Dominus Iesus, மற்றும் Mitis et Misericors Iesus என்ற இரு அப்போஸ்தலிக்க அறிக்கைகள் குறித்து முதலில் நினைவூட்டினார்.

திருமணத்தின் செல்லுபடியாகாத நிலை குறித்து ஆராயும் பாதையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சீர்திருத்தங்களை வழங்கிய இந்த அப்போஸ்தலிக்க அறிக்கைகள் அனைத்து விசுவாசிகளுக்கும் பயன்படும்வகையில் உதவிவருவது குறித்து மகிழ்வதாக தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமணம் செல்லாது என்பது குறித்த படிநிலைகள் விரைவானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்ற ஆயர் மாமன்ற திருஅவைத் தந்தையர்களின் அழைப்புக்கேற்ப படிநிலைகளில் மேய்ப்புப்பணி சார்ந்த மாற்றங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே பரிந்துரைக்கப்பட்டன என்பதையும் நினைவூட்டினார்.
நல்லதை நோக்கிய இந்த மாற்றங்கள் நீதி நிர்வாகத்தையும் தொடவேண்டும், அதன் வழியாகவே இதற்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் திருமண நிலை குறித்து தெளிவான விளக்கத்தைத் திருஅவையிடம் இருந்து பெறமுடியும் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் மேலும் எடுத்துரைத்தார்.
திருமண விலக்குகள் குறித்த சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதன் மையமாக ஒவ்வொரு மறைமாவட்டத்தின் ஆயரும் இருக்க வேண்டும் என தான் விரும்பி செயல்படுத்தியதை மீண்டும் குறிப்பிட்ட திருத்தந்தை, ஏனெனில், நீதி நிர்வாகத்தில் அவரே பொறுப்பானவர் எனவும், ஒவ்வொரு மறைமாவட்டத்தின் திருமணம் தொடர்புடைய நீதிமன்றம் மறைமாவட்ட மேய்ப்புப்பணி அக்கறையுடன் ஆயருக்கு உதவ வேண்டும் எனவும், இந்த சீர்திருத்த படிநிலைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.
திருமணம் தொடர்புடைய படிநிலைகள் அனைத்தும் நீதியின் செயல்பாடுகளாக, மக்களுக்கு உதவும் நோக்குடையதாக, விசுவாசிகளின் விண்ணப்பங்களை அக்கறையுடன் ஆராய்வதாக இருக்க வேண்டும் என்ற திருத்தந்தை, திருமண வாழ்வு என்னும் பாதையில் உரசலின்றி நடைபோடுவதற்கும், தம்பதியரின் அடிப்படை உரிமைகளுக்கும் கொள்கைகளுக்கும் உறுதி வழங்குவதற்கும், உண்மைக்கு பணியாற்றுவதை உறுதிச்செய்வதற்கும் திருமண உறவு பற்றிய ஆய்வுகள் உதவவேண்டும் என்று எடுத்துரைத்ததுடன், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் 1975ஆம் ஆண்டிலேயே இத்தகைய சீர்திருத்தங்கள் குறித்து எடுத்துரைத்ததையும் மேற்கோள் காட்டினார்.
திருமண முறிவு குறித்த புதிய சீர்திருத்தங்கள் திருமண விலக்குக்கு ஆதரவு அளிக்கவில்லை, மாறாக, திருமண முறிவு குறித்த விண்ணப்பங்கள் விரைவாக ஆராயப்பட வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றன என்ற திருத்தந்தை, விசுவாசிகளை தங்களின் திருமண நிலை குறித்த ஒரு சந்தேகத்திலேயே தொடர்ந்து வைத்திருப்பதை நாம் தவிர்க்க வேண்டும் என்பதையும், அவர்களின் மனச்சான்றிற்கு அமைதியை வழங்கும் நோக்கத்தில் நம் முடிவுகள் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஒருவர் ஒருவருக்கிடையேயான உறவை மீண்டும் கொண்டுவரவும், அதை புனிதப்படுத்தவுமான பொறுப்புணர்வு என்னும் கடமையைக் கொண்டுள்ள திருஅவை அதிகாரிகள், எவ்வித ஏமாற்றத்தையும் தராத எதிர்நோக்கினால் நிரப்பப்பட்டவர்களாக செயல்படவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் மேலும் அழைப்பு விடுத்தார்.