“தேசியத் திருத்தலங்களாக உயர்த்தப்படுவதற்கான விதிமுறைகள்” என்ற தலைப்பிலான இந்திய ஆயர்களின் புதிய நூல், மறைமாவட்டத் திருத்தலங்களை, தேசியத் திருத்தலங்கள் என்ற தகுதிநிலைக்கு உயர்த்துவதற்கான ஒரு வழிகாட்டியாக செயல்படும்.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) திருஅவைச் சட்டத்திற்கான ஆணையம், குறிப்பிடத்தக்க மறைமாவட்டத் திருத்தலங்களை தேசியத் திருத்தலங்களாக அங்கீகரிப்பதற்கான தெளிவான வழிமுறைகளை புதிய நூல் ஒன்றில் வழங்கியுள்ளதாக அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள புனித யோவான் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 94-வது செயற்குழுக் கூட்டத்தில், “தேசியத் திருத்தலங்களாக உயர்த்தப்படுவதற்கான விதிமுறைகள்” என்ற தலைப்பில் இதுவொரு அதிகாரப்பூர்வமான நூலாக வெளியிடப்பட்டதாக அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நூலில் விளக்கப்பட்டுள்ள விரிவான நெறிமுறைகள், மறைமாவட்டத் திருத்தலங்களைத் தேசிய தகுதி நிலைக்கு உயர்த்துவதற்கும், அதிக அங்கீகாரம் மற்றும் திருப்பயணத்திற்குரிய வாய்ப்புகளை வளர்ப்பதற்கும் பல ஆயர்கள் வெளிப்படுத்திய விருப்பத்தை நிவர்த்தி செய்கின்றன என்றும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.