சமூகத்தொடர்பு என்பது தன்னிடமிருந்து சற்று வெளியேறி, நம்மைப் பிறருக்குக் கொடுப்பது, கிறிஸ்து நமக்குக் கூறுவதை எடுத்துரைப்பது என்றும், வெளியேறுதல் மட்டுமல்ல மாறாக, மற்றவர்களைச் சந்தித்தலே உண்மையான தகவல் தொடர்பு என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
சனவரி 25 சனிக்கிழமை திருத்தூதர் பவுல் மனமாற்ற திருவிழாவினைத் திருஅவை சிறப்பித்துக் கொண்டிருக்கும் வேளையில், வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த உலக சமூகத் தகவல் தொடர்பாளர்களுக்கு யூபிலி வாழ்த்து தெரிவித்து திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார்.
உலக சமூத்தொடர்பாளர்களுக்கான யூபிலி குறித்து தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தகவல் தொடர்புப்பணி என்பது உருவாக்கும் பணி என்றும், சமூக, தலத்திருஅவை என அனைத்தையும் உருவாக்கும் பணி உண்மைத் தன்மையுடன் முன்னேறிச்செல்லும் பணி என்றும் கூறினார்.
நான் எப்போதும் உண்மையைத்தான் கூறுகின்றேன் என்று கூறுபவர்கள் தங்களது செயலில் வாழ்க்கையில் தங்களுக்குள் உண்மையாக இருக்கின்றார்களா என்று சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், இறைத்தந்தை தனது மகனுடனும், தூய ஆவியுடனும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றாரோ அது போல தொடர்புகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
தகவல் தொடர்பு என்பது ஒரு இறைத்தன்மை கொண்டது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், சமூகத்தகவல் தொடர்பாளர்களின் பணிக்காகத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து அவர்கள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.