வெஸ்ட் பேங்க் பகுதியின் ஜெனின் என்ற பாலஸ்தீனிய நகரை இஸ்ராயேல் இராணுவம் 17 நாட்களாக ஆக்ரமித்துவரும் நிலையில், மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டு வாழ்வதாகவும், உணவு வாங்கக்கூட வெளியில் செல்ல அஞ்சுவதாகவும் ஜெனின் பங்குகுரு Amer Jubran கவலையை வெளியிட்டார் .
ஜெனின் இலத்தீன் வழிபாட்டுமுறை பங்குதளத்தின் அருள்பணி ஜுப்ரான் அவர்கள், உள்ளூர் மக்கள் அனைவரும் ஒருவித அச்சத்திலேயே தொடர்ந்து வாழ்வதாகவும், அவர்களுக்காக உலக சமுதாயத்தின் இறைவேண்டல் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
வத்திக்கான் தினசரி செய்தி இதழ் L’Osservatore Romanoவிற்கு நேர்முகம் வழங்கிய ஜுப்ரான் அவர்கள், காசாவில் போர் நிறுத்த ஒப்பந்த நாளான ஜனவரி 21ஆம் தேதியிலிருந்து இஸ்ராயேல் இராணுவம் ஜெனின் நகருக்குள் நுழைந்து தொடர்ந்து அங்கிருப்பதாகவும், ஏற்கனவே இந்நகர் பல்வேறு மோதல்களை அதற்கு முன்பிருந்தே அனுபவித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஜெனின் நகரைச் சுற்றி சில கிறிஸ்தவ சபைகள் இருந்தாலும், 80 குடும்பங்களைக் கொண்டு ஜெனின் நகர கத்தோலிக்க பங்குதளம் மட்டுமே இன்னும் தொடர்ந்து இயங்கி வருவதாகவும் அருள்பணி ஜுப்ரான் மேலும் கூறினார் .
ஜெனின் நகரிலிருந்து ஏறக்குறைய இருபதாயிரம் மக்கள் அண்மை ஊர்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும், நகருக்குள் தண்ணீர் தொட்டிகள் தகர்க்கப்பட்டுள்ளதால் குடிநீர் பஞ்சம் நிலவுவதாகவும், இதுவரை 180 வீடுகள் வரை முற்றிலும் அழிவுக்குள்ளாகியுள்ளதாகவும் அருள்பணி ஜுப்ரான் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
மக்கள் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேற அஞ்சும் நிலை தொடர்ந்து நிலவுவதால் அவர்களுக்கு உலக சமுதாயத்தின் செப ஆதரவு தேவைப்படுவதாகவும் அருள்பணி ஜுப்ரான் தெரிவித்தார் .