செயற்கை நுண்ணறிவு குறித்து பிரான்ஸ் நாட்டின் பாரிசில் இடம்பெறும் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்கென, பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன் அவர்களுக்குச் செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார் .
’செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாடு’ என்ற தலைப்பில் இம்மாதம் 10 மற்றும் 11 தேதிகளில் இடம்பெறும் கூட்டத்திற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், ஏற்கனவே இத்தாலியின் பூலியாவில் இடம்பெற்ற ஜி7 கூட்டத்தின்போது, தான் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள் எடுக்கும் தேர்வுகள் மனிதக் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதை இங்கு மீண்டும் நினைவூட்டியுள்ளார்.
இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லையெனில், ஆச்சரியம் நிறைந்த இந்த செயற்கை நுண்ணறிவு மனித மாண்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆபத்து உள்ளது எனவும் தன் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மனித குலத்தை செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் பாதிப்புகளில் இருந்து காப்பதற்கு அரசியல் மட்டத்தில் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை தான் பாராட்டுவதாகத் தெரிவிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போதைய பாரிஸ் மாநாடும் பயன்தரும் தீர்மானங்களை எடுக்க உதவும் வகையில் பல்வேறு வல்லுனர்களுடன் இடம்பெறுவது குறித்து தன் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளார்.
நம்முடைய இருப்பின் அர்த்தத்தை வெளிப்படுத்துவது நம் இதயம் மட்டுமே என்பதை இம்மாநாட்டில் பங்குபெறுவோர் அனைவரும் உணர்ந்து செயல்படவேண்டும் என்ற அழைப்பை விடுக்கும் திருத்தந்தையின் செய்தி, எந்த ஒரு புதிய தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளும் பொது நலனுக்கு பலன் தருவதாக இருப்பதோடு, மனித படைப்பாற்றலை கட்டுப்படுத்துவதாக இருக்கக் கூடாது என்றவகையில் அரசியல் அளவில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை என மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.