பிப்ரவரி 28, வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, செயற்கை ஆக்சிஜன் கொடுக்கும் சிகிச்சைமுறை மீண்டும் வழங்கப்பட்டதாகவும், முழு விழிப்புடன் இருக்கும் திருத்தந்தை அவர்கள், மருத்துவ சிகிச்சைகளுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அறிக்கை ஒன்றில் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது .
மார்ச் 1, சனிக்கிழமை வெளியிட்ட தகவல்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த இரவு எந்தவிதமான பிரச்சனைகளுமின்றி நன்றாக உறங்கி ஓய்வெடுத்தார் என்று குறிப்பிட்டுள்ள திருப்பீடத் தகவல் தொடர்புத்துறையானது, வெள்ளிக்கிழமை திருத்தந்தைக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்டதால் (Non-invasive ventilation) (NIV) செயற்கை ஆக்ஸிஜன் கொடுக்கும் சிகிச்சை முறை வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 28, வெள்ளிக்கிழமை காலையில் உடலியக்க பயிற்சி முறைகள், மருத்துவமனை சிற்றாலயத்தில் செபம் என தனது நாளைத் துவங்கிய திருத்தந்தை அவர்களுக்கு பிற்பகலில் மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வாந்தி மற்றும் சுவாசக்காற்றை உள்ளிழுப்பதில் திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
மருத்துவக் கணிப்புகளுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் திருத்தந்தையின் உடல்நிலை முன்னேற்றம் அடைய, தொடர்ந்து செபிக்குமாறு அனைத்து மதநம்பிக்கையாளர்களுக்கும் அழைப்புவிடுத்துள்ளது திருப்பீடம்.