கல்விச் சமூகத்திற்குள் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அருள்பணித்துவ மாணவர்கள் தொடர்ந்து சான்றளிப்பது அவசியம் என்றும், தாங்கள் அனுப்பப்படும் தலத்திருஅவை, பங்குத்தளம், இயக்கம், அமைப்பு, குடும்பம் போன்றவற்றில் சமூக உருவாக்கத்தை ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார்.
சனவரி 25 சனிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் பிரான்சில் உள்ள உயர்குருமடத்தின் அதிபர் தந்தையர் மற்றும் அருள்பணித்துவப் யிற்சி மாணவர்கள் என ஏறக்குறைய 40 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தெளிந்து தேர்தல் பற்றிய பயணத்தின் வாயிலாக மிக முக்கியமான பங்கினை திருஅவையில் அவர்கள் ஆற்றுகின்றார்கள் என்றும் கூறினார்.
உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ, ‘ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று பதில் சொல் என்று சிறுவன் சாமுவேலுக்கு கூறிய வயதானஇறைவாக்கினர் எலியா போன்று, உறுதியளிக்கும் உடனிருப்பாகவும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இளையோர்க்கான திசைகாட்டியாகவும் அருள்பணித்துவ பயிற்சி இல்லத்தில் இருப்பவர்கள் இருக்கின்றார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
சமகால மனிதர்கள் ஆசிரியர்களை விட சான்றுகளுக்கே அதிகமாக செவிசாய்க்கின்றார்கள், ஆசிரியர்களுக்கு செவிசாய்க்கின்றார்கள் என்றால் அவர்கள் சான்றுகளாக இருக்கின்றார்கள் என்று அர்த்தம் என்ற திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் வரிகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை அவர்கள், இது அருள்பணித்துவப் பயிற்சி இல்லத்தில் இருப்பவர்களுக்குப் பொருந்தும் என்றும், சமூக உருவாக்கத்தினை மனித பரிமாணத்தின் அனைத்து நிலைகளில் உள்ள பணிகளையும் இணைக்கும் வகையில் ஒன்றிணைந்து செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இத்தகைய ஒன்றிணைந்த வாழ்விற்கு சான்றுகளை வழங்கும் இடங்களாகவும், எதிர்கால அருள்பணியாளர்களின் வளர்ச்சிக்கு ஏதுவான இடமாகவும் குருமடங்கள் இருக்கவேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தந்தைக்குரிய அன்போடும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் என்ற உணர்வோடு வாழவேண்டும் என்றும், அங்கு வாழும் மனித உறவுகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மையைக் கவனித்துக்கொள்வது முக்கியம் என்றும் எடுத்துரைத்தார்.
இணக்கமான நல்லுறவு தெளிந்துதேர்தல் போன்றவை இத்தகைய ஒரே குடும்பச் சூழலில் வளரும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அருள்பணித்துவ மாணவர்கள் பிறரால் தீர்ப்பளிக்கப்படுவோம் என்று அஞ்சாமல், பிறருடனான உறவில் உண்மையாக இருக்கவேண்டும் என்றும், தன்னை முழுவதுமாக வெளிப்படுத்துபவராக இருக்கவேண்டும் என்றும் கூறினார்.
இத்தகைய வாழ்க்கை வாழும் அருள்பணித்துவ மாணவர் தனது வாழ்க்கைக்கான இறைவனின் விருப்பத்தைக் கண்டறியவும், சுதந்திரமாக பதிலளிக்கவும், உருவாக்குபவர்களுடன் சேர்ந்து, தனது சொந்த உருவாக்கத்தில் முழுமையாக ஒத்துழைக்க முடியும் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்கு மனித, ஆன்மிக, அறிவுசார் மற்றும் மேய்ப்புப் பணி உருவாக்கத்தை முன்மொழிவது நிச்சயமாக ஒரு பெரிய சவால், எளிதான பணி அல்ல என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஒவ்வொரு நபரின் பயணத்திலும் கவனம் செலுத்துவதும், பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதும் முக்கியம் என்றும், பன்முகத்தன்மை என்னும் கடவுளின் கொடையானது, மற்றவரை, அவர் இருப்பது போலவே, வரவேற்பது எதிர்காலத் தேவைகளில் அருள்பணித்துவ சகோதரத்திற்கான உறுதி என்றும் கூறினார்.
உண்மையான உள்மனச் சுதந்திரம் உள்ளவராக, மனித உறவுகளுக்குத் தகுதியான சமநிலையான பக்குவம் அடைந்தவராக, மென்மை, உடனிருப்பு, இரக்கம் என்னும் கடவுளின் பண்பு கொண்டவராக, மறைப்பணி ஆர்வம் கொண்டவராக அருள்பணித்துவ மாணவர்கள் இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார்.