பிப்ரவரி 10ஆம் தேதி திங்களன்று குவாத்தமாலா நாட்டில் 56 பேரின் உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்து குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் வெளியிடும் இரங்கல் தந்தியை திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்அந்நாட்டுத் திருஅவைக்கு அனுப்பியுள்ளார் .
பிப்ரவரி 10ஆம் தேதி குவாத்தமாலா நகருக்கு வெளியே ஒரு பாலத்திலிருந்து Las Vacas ஆற்றில் பேருந்து ஒன்று விழுந்ததில் 56 பேர் உயிரிழந்தனர், 9 பேர் படுகாயமுற்றனர்.
70க்கும் மேற்பட்ட பயணிகளைக் கொண்டிருந்த இந்த பேருந்து விபத்துக்குள்ளாகி உயிர்களை பலிவாங்கியது குறித்து Santiago de Guatemala பெருமறைமாவட்ட பேராயர் Gonzalo de Villa y Vásquez அவர்களுக்கு திருத்தந்தையின் பெயரால் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருப்பீடச் செயலர், இத்துன்பகரமான விபத்து குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த கவலையை வெளியிட்டதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிப்பதாகவும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடுவதோடு, இவ்விபத்தில் காயமுற்றோர் விரைவில் குணமடைய திருத்தந்தை ஆவல் கொள்வதாகவும் மேலும் அதில் கூறியுள்ளார்.
குவாத்தமாலா நகரின் புறநகர் பகுதியில் பேருந்து ஒன்று Las Vacas ஆற்றின் மீதுள்ள Puente Belice பாலத்தில் இரு வாகனங்கள் மீது மோதி 65 அடி உயரத்திலிருந்து ஆற்றில் விழுந்ததில் 56 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.