ஒருவரையொருவர் அன்புகூர்வோம் என்றும், உயிரின் ஒன்றிப்பில், தந்தை, மகன், மற்றும் தூய ஆவியார் மீது நம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்துவோம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார் .
பிப்ரவரி 06, வியாழக்கிழமையன்று, தங்கள் மேற்படிப்புத் தொடர்பாக உரோமை வந்திருக்கும் ஆர்த்தடாக்ஸ் கீழைத் திருஅவைகளின் இளம் அருள்பணியாளர்கள் மற்றும் துறவிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு உரைத்தார் திருத்தந்தை.
தொடக்கமாக அவர்களை அன்புடன் வரவேற்று ஒன்றிப்பின் மகிழ்வு குறித்து வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, “அடையாளம்” (Symbol) என்ற சொல்லை மூன்று வழிகளில் அவர்களுக்கு விளக்கிக் கூறினார்.
முதலாவது, இறையியல் அடிப்படையில், நம்பிக்கை அறிக்கை என்பது, கிறிஸ்தவ நம்பிக்கையின் முக்கிய உண்மைகளை முன்வைக்கிறது என்றும், இரண்டாவதாக, திருஅவையியல் அடிப்படையில், அடையாளத்தையும் ஒன்றிப்பையும் குறிக்கும் வகையில் இது விசுவாசிகளை ஒன்றிணைக்கிறது என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, மூன்றாவதாக, ஆன்மிகத்தின் அடிப்படையில், ஓர் இறைபுகழ்ச்சியாக, இது கடவுளுடனும் கிறிஸ்தவர்களுடனும் ஒன்றிப்பை வளர்க்கிறது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் கிறிஸ்தவர்களை ஒன்றிப்பைத் தழுவுமாறு வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, அலகையிடமிருந்து பிரிவினை வரும் அதேவேளையில், நம்பிக்கை அறிக்கை என்னும் அடையாளம் நம்மை ஒன்றிணைக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
அவர்களின் இந்தச் சந்திப்பு காணக்கூடிய ஒன்றிப்பின் அடையாளமாகச் செயல்படும் என்றும், முழு ஒன்றிப்புக்கான தொடர்ச்சியான முயற்சிகளை ஊக்குவிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்த திருத்தந்தை, இறுதியாக, அவர்கள் அனைவரையும் ஒன்றாக நம்பிக்கை அறிக்கையை அறிக்கையிடும்படிக் கேட்டுக்கொண்டு தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார் .