அமைதிக்கான துணிவு என்பது வெறுமனே போர்நிறுத்தத்தை நாடுவதோ அல்லது பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுப்பதோ மட்டுமல்ல என்றும், வன்முறை உருவாவதற்கு முன்பே செயல்பட முடியும் என்று நம்புவதும், மோதல்களுக்குக் காரணமான மனிதாபிமானமற்ற விவாதத்தை நிராகரிப்பதும் ஆகும் என்றும் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் கூறினார் .
பிப்ரவரி 7, வெள்ளிக்கிழமை இராணுவம், காவல் மற்றும் பாதுபாப்புப் படையினருக்கான யூபிலியின் ஒரு பகுதியாக “அமைதியைப் பெறுவதில் இராணுவம்” என்ற தலைப்பில் உரோமில் உள்ள பிரான்சிஸ் நிறுவனத்தின் புனித லூயிஸ் நிலையத்தில் நடைபெற்ற மாநாட்டில் இவ்வாறு திருப்பீட வெளியுறவுத்துறைச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் தெரிவித்தார்.
எல்லா இடங்களிலும் ஒற்றுமையையும் உடன்பிறந்த உணர்வையும் கட்டியெழுப்ப முயல்வதும், விரோதங்களைச் சமாளிக்க மன உறுதியையும் துணிவையும் கொண்டிருப்பதும் அமைதியை ஏற்படுத்துவதற்கான துணிவு என்று வலியுறுத்திய பேராயர் காலகர் அவர்கள், உண்மையான மற்றும் நீடித்த நல்லிணக்கத்திற்காக மக்களுடன் இணைந்து பணியாற்றுவதும் அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு பிரச்சினைகளில் ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படுகிறது என்றும், உணவு, சுற்றுச்சூழல், நலவாழ்வு மற்றும் பொருளாதார பாதுகாப்பும், கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய பேராயர் காலகர் அவர்கள், நீதி மற்றும் தொண்டு அடிப்படையில் ஓர் ஒழுங்கை உருவாக்குவது அமைதிக்கு தேவை, இது ஒற்றுமையின் பலன், நமது பொதுவான வீட்டைப் பாதுகாத்தல் மற்றும் பொது நன்மையை மேம்படுத்துதல் என்றும் சுட்டிக்காட்டினார்.
நேரடியான வழக்கமான போர்களுக்கும் மேலதிகமாக, இன்று மறைமுகப் போர்கள், உள்நாட்டுப் போர்கள், கலப்பினப் போர்கள், பனிப்போர்கள், ஒத்திவைக்கப்பட்ட மோதல்கள் மற்றும் நாடுகடந்த மோதல்களாக மாறிவரும் பல போர்களை நாம் காண்கிறோம் என்று கூறிய பேராயர் காலகர் அவர்கள், புவிசார் அரசியல் நிலைமை சில நேரங்களில் மிகவும் சிக்கலானதாகவும், துருவமுனைப்பு கொண்டதாகவும் இருப்பதால் எந்தவொரு மோதலுக்கானத் தீர்வும் மிகவும் கடினமாகிவிடுகின்றது என்றும் குறிப்பிட்டார்.
நாம் அமைதிக்கான துணிவைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், உண்மையான நல்லிணக்கத்திற்காக உழைக்க வேண்டும் வேண்டும் என்றும் வலியுறுத்திய பேராயர் காலகர் அவர்கள், பல நாடுகளில் பேரழிவு ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பேராபத்துக்களை ஏற்படுத்துகின்றன என்றும் கூறினார்.
மனித மாண்பு மற்றும் மனித சமூகத்தின் அடிப்படையிலான உறுதியான கொள்கைகளின் அர்த்தத்தைத் தேடுவதற்கும் மீண்டும் கண்டுபிடிப்பதற்கும், அரசியல், கலாச்சார அல்லது மத வேறுபாடுகளுக்கு அப்பால் நம்மை ஒன்றிணைப்பதற்கும், அவற்றைக் கடைப்பிடிப்பதற்கும் துணிவு தேவை என்றும், இது உண்மையான அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும் இணக்கமான பன்னாட்டு ஒழுங்கை உருவாக்குவதற்கும் ஒரு நிபந்தனையாகும் என்றும் பேராயர் காலகர் கூறினார் .