இலங்கையின் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், மக்களை ஒடுக்குவதை விடுத்து, இரக்கம், நல்லிணக்கம் மற்றும் ஒருவருக்கொருவர் மீதான அன்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளதாக யூக்கான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
பிப்ரவரி 1, சனிக்கிழமையன்று, கலகெதிஹேனாவிலுள்ள நித்தம்புவவில், புதிய கோவில் ஒன்றினைப் புனிதப்படுத்தும் திருச்சடங்கில் கலந்துகொண்டபோது, “நாம் கோபம் மற்றும் வெறுப்பால் தூண்டப்பட்ட ஒரு நீண்ட போரைச் சகித்துக் கொண்டோம், ஆனால் இப்போது ஒருவரையொருவர் அன்புகூர வேண்டிய நேரம் இது” என்று சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், “அரசியல்வாதிகள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் மக்களைக் கட்டுப்படுத்தக் கூடாது” என்ற வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.
இலங்கையில், 1983-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டுவரை, பாதுகாப்புப் படைகளுக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நிகழ்ந்த கொடிய உள்நாட்டுப் போரை நினைவுகூர்ந்து கர்தினால் இரஞ்சித் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .
“நாட்டில் போரால் ஏற்பட்ட காயங்களை ஆற்றும் பொருட்டு, அனைவரையும் வலிமையுடன் ஒன்றிணைக்க முயற்சிக்கும் அரசுத் தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் முன்மாதிரியை நாட்டின் அரசியல் தலைவர்கள் பின்பற்ற வேண்டும்” எனவும் கர்தினால் இரஞ்சித்அச்செய்தியில் விண்ணப்பித்துள்ளார் .
மேலும் “அரசுத் தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் வட இலங்கைக்கான பயணத்தின்போது, யாழ் மக்கள் அவரை அன்புடன் வரவேற்றதையும், தென் இலங்கையுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அங்குள்ள மக்கள் மத்தியில் பலமான விருப்பம் இருந்ததையும் நாம் கண்டோம்” என்றும் கர்தினால் தனது உரையில் எடுத்துக்காட்டியுள்ளார் .
இலங்கையில், 1983-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டுவரை பாதுகாப்புப் படைகளுக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நிகழ்ந்த கொடிய உள்நாட்டுப் போரில், 1,00,000-க்கும் அதிகமான மக்கள் இறந்ததாகவும் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மோதலின் இறுதி நாள்களில் ஏறத்தாழ 40,000 பொதுமக்களும், 10 அருள்பணியாளார்களும் கொல்லப்பட்டனர் என்று ஐநா-வும் மதிப்பிட்டுள்ளது. (UCAN)