திருத்தொண்டர்கள் தங்களது பணியின் வழியாக இரக்கமுள்ள இறைத்தந்தையின் முகத்தை உருவாக்கும் சிற்பியாகவும், ஓவியராகவும் இருக்கின்றனர் என்றும், தமத்திரித்துவத்தின் மறைபொருளுக்கு சான்றாகத் திகழ்கின்றார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார் .
பிப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற திருத்தொண்டர்களுக்கான யூபிலி சிறப்புத் திருப்பலிக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பதிலாக தலைமையேற்று வழிநடத்தி திருத்தந்தையின் மறையுரைக் கருத்துக்களை வாசித்தபோது புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா இவ்வாறு கூறினார்.
உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடனிருப்பை இன்று நாம் மத்தியில் உணரவேண்டும் என்றும், துன்பம் மற்றும் நோயின்போது கடவுள் அவருக்கு உதவுவார் என்ற நமது செபத்தை இன்னும் வலுவாகவும், தீவிரமாகவும் செய்ய இது நம்மைத் தூண்டுகிறது என்றும் மறையுரைக்கு முன்பாக கர்தினால் பிசிகெல்லா எடுத்துரைத்தார்.
திருத்தொண்டர்களுக்கானத் திருத்தந்தையின் மறையுரைக் கருத்துக்கள்.
கிறிஸ்தவ வாழ்க்கை மற்றும் திருத்தொண்டர் பணியின் அடிப்படை பரிமாணத்தைப் பற்றி, மன்னிப்பு, தன்னலமற்ற சேவை மற்றும் ஒன்றிப்பு என்னும் மூன்று தலைப்புக்களின் கீழ் திருத்தந்தை தனது கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார் .
மன்னிப்பு
மன்னிப்பை எடுத்துரைத்தல் என்பது திருத்தொண்டர்களின் அடிப்படையான முக்கிய கடமையும், திருஅவைப் பயணத்தின் இன்றியமையாத ஓர் அங்கமும், இணக்கமுள்ள மனித வாழ்வின் நிபந்தனையுமாகும் என்றும், “நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்” (லூக். 6:27) என்று எடுத்துரைக்கும் இயேசு அதன் தேவையையும் நோக்கத்தையும் சுட்டிக்காட்டுகின்றார் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார் .
ஒன்றிணைந்து வளர்தல், ஒளியையும் நிழலையும் பகிர்ந்து கொள்ளுதல், பிறரின் வெற்றி தோல்விகளை பகிர்ந்து கொள்ளுதல், மன்னிப்பு கேட்கவும் கொடுக்கவும் அறிந்திருத்தல், உறவுகளை மீண்டும் இணைத்தல், நமக்கு எதிராகக் குற்றம் செய்பவர்களையும், மறுதலிப்பவர்களையும் அன்பு செய்தல் ஆகியவற்றை அறிந்திருத்தல் மிக அவசியம் என்று திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்.
மன்னிப்பது என்பது, நம்மிலும் நம் சமூகங்களிலும் ஒரு வரவேற்கத்தக்க, பாதுகாப்பான எதிர்காலத்தைத் தயார் செய்வது என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், உலகின் எல்லைகளுக்கு அழைத்துச் செல்லும் பணியில் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ள திருத்தொண்டர்கள், தவறு செய்பவர்கள், காயப்பட்ட ஆன்மாவைக் கொண்டவர்கள், என அனைவருக்கும் வழிகாட்டுதலையும், உதவிகளையும் வழங்கவும் கற்பிக்கவும் உறுதிபூண்டுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னைத் துன்புறுத்திய சவுல் அரசன் மேல் அன்பு காட்டி அவரைத் தாக்காது விட்ட தாவீது அரசனின் நம்பிக்கையும் தாராளமான அன்பையும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், தன் மேல் கல்லெறிந்தவர்களை மன்னித்த திருத்தொண்டர் ஸ்தேவானின் எடுத்துக்காட்டான வாழ்க்கையையும் மரணத்தையும் எடுத்துரைத்துள்ளார். மேலும் நமக்காக சிலுவைச்சாவை ஏற்று பாடுகள் பட்ட இயேசு தன்னைத் துன்புறுத்தியவர்களுக்க்காகவும் சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வனுக்காகவும் செபிக்கின்றார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னலமற்ற பணி
“நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும்” (லூக்கா 6:35). என்ற இறைவார்த்தைகளின் வழியாக நட்புறவின் நறுமணத்தைப் பரப்பி தன்னலமற்ற பணியினை வலியுறுத்தும் இயேசு, எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுள் நம்மேல் கொண்டுள்ள நட்புறவு, நாம் பிறர்மேல் கொண்டுள்ள நட்புறவு போன்றவற்றை தன்னலமற்ற பணி வலியுறுத்துகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
திருத்தொண்டர்கள் தங்களது பணியின் வழியாக இரக்கமுள்ள இறைத்தந்தையின் முகத்தை உருவாக்கும் சிற்பியாகவும் ஓவியராகவும் இருக்கின்றனர் என்றும், தமத்திரித்துவத்தின் மறைபொருளுக்கு சான்றாகத் திகழ்கின்றார்கள் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார் .
நற்செய்தியின் பல இடங்களில் தன்னை ஒளி என்றும் குறிப்பிடும் இயேசு, என்னைக் காண்பவன் தந்தையைக் காண்கின்றான் என்றும், “மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்“ (மாற்கு 10:45) என்ற இறைவார்த்தையின் வழியாகத் தனது தன்னலமற்ற பணியினை சீடர்களுக்கு விளக்கினார் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார் .
கிறிஸ்துவின் அன்பிற்காகத் தங்களை அர்ப்பணித்து தன்னலமற்றப் பணியாற்றும் திருத்தொண்டர்கள், தாங்கள் சந்திக்கும் மக்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தரவேண்டும் என்றும், புன்னகையுடன், புகார் செய்யாமல், அங்கீகாரத்தைத் தேடாமல், ஒருவருக்கொருவர் ஆதரவளித்து, ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களுடனான உறவில் மேம்படவேண்டும் என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார் .
ஒன்றிப்பு
எதையும் கேட்காமல் கொடுப்பது நம்மை ஒன்றிணைக்கின்றது, நம்மில் பிணைப்புகளை உருவாக்குகிறது, மக்களின் நன்மையைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாது ஒன்றித்து இருப்பதை வெளிப்படுத்துகிறது மற்றும் வளர்க்கிறது என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், திருத்தொண்டர்களின் பாதுகாவலரான புனித லாரன்ஸ், குற்றவாளிகளால் திருஅவையின் சொத்துக்களை ஒப்படைக்கும்படி கேட்டபோது, ஏழைகளைச் சுட்டிக்காட்டி, “இதோ எங்கள் சொத்து என்றார், அவரைப்போல நாம் மக்களிடத்தில் அன்பையும் ஒன்றிப்பையும் உருவாக்கவேண்டும் என்றும் கூறினார்.
நம்முடன் வாழும் மக்கள் நமக்கு முக்கியமானவர்கள், அவர்களை நாம் அன்பு செய்கின்றோம், நமது வாழ்க்கைப் பயணத்தில் அவர்கள் பங்குபெற வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம் என்பதை வார்த்தையாலும் வாழ்வாலும் எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், குடும்பங்களிலும் தேவையில் இருக்கும் மக்களிடத்திலும் பணியை விரிவுபடுத்துங்கள் என்றும் திருத்தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.