இந்தியக் கிறிஸ்தவர்களுக்கு நீதி என்பது கேலிக்கூத்தாக உள்ளது!
இந்தியாவில், குறிப்பாக, கிறிஸ்தவர்களைக் குறிவைத்து அவர்தம் மத நம்பிக்கையை ஒடுக்குவதற்கென்றே ஓர் அமைப்பு இருப்பதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர் என்று தெரிவித்துள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.
கிறித்தவ அருள்பணியாளர்கள் மற்றும் வழிபாடு செய்பவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தும் பொருட்டு, காவல்துறை அடிக்கடி அரசியல் மற்றும் இந்து தேசியவாதக் குழுக்களுடன் இணைந்து செயல்படுகிறது என்று அவ்வழக்கறிஞர்கள் உரைப்பதாகவும் அச்செய்தி நிறுவனம் கூறுகின்றது.
மேலும் இந்தியாவின் 12 மாநிலங்களில், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சிறிய இறைவேண்டல் கூட்டங்களுக்குத் தொல்லைக் கொடுப்பதற்கென்றே மதமாற்றத் தடைச்சட்டங்கள் தவாறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று அவ்வமைப்பு குற்றம் சுமத்துவதாகவும் குறிப்பிடுகிறது .
குறிப்பாக, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தச் சட்டங்கள் 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கடுமையான தண்டனைகளுடன் கடுமையாக்கப்பட்டுள்ளது என்று அவ்வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு உரைக்கிறது .
மேலும் இச்சட்டங்களின் கீழ் பெண்கள், குழந்தைகள் உட்பட பல கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், கடந்த ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக 834 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், பெரும்பாலும் உத்தரபிரதேசத்தில் அவர்களுக்கு எதிரான பகையுணர்வு அதிகரித்துள்ளதாகவே அறிக்கைகள் காட்டுகின்றன என்றும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் .
குறிப்பாக, மரணத்திலும் கூட, மதச் சிறுபான்மையினர் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர் என்று கூறும் வழக்கறிஞர்கள், இரமேஷ் பாகேல் என்ற நபர் தனது தந்தையை தங்கள் கிராமத்தில் நல்லடக்கம் செய்வதற்குக் கூடச் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டார், ஆனால் இந்து கிராம மக்கள் அதற்கு மறுத்துவிட்டனர். வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது, அங்கு ஒரு நீதிபதி மத உரிமைகளை ஆதரித்தார், ஆனால் மற்றொருவர் பொது ஒழுங்கிற்கு முன்னுரிமை அளித்தார் என்று கூறி ஓர் உண்மைச் சம்பவத்தையும் எடுத்துக்காட்டியுள்ளனர்.
இறுதியில், இறந்த அந்தக் கிறிஸ்தவரை 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், நல்லடக்கம் செய்வதற்கான ஓர் இடத்தைக் கிறிஸ்தவர்களுக்கு வழங்குமாறு அரசிடமே கோரியுள்ளது நீதி அமைப்பு தோல்வியுற்றதையே காட்டுகிறது என்றும் வழக்கறிஞர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். (UCAN)