இறக்கும் தறுவாயில் இருப்போரின் நல்வாழ்வுக்கான நோய்த்தடுப்பு சிகிச்சையினை ஊக்குவிப்பது இரக்கத்தின் வெளிப்பாடு மற்றும் ஒவ்வொரு நபரையும் மதிக்கும் செயல்.
கனடா நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையும், வாழ்வுக்கான திருப்பீடக்கழகமும் இணைந்து ”நம்பிக்கையை எடுத்துரைப்பதை நோக்கி” என்ற கருத்தில், ”இறக்கும் தறுவாயில் இருப்போரின் நல்வாழ்வுக்கான நோய்த்தடுப்பு சிகிச்சை” குறித்த அனைத்துலக கருத்தமர்வு கனடா நாட்டின் டொரோண்டோ நகரில் இம்மாதம் 21 முதல் 23 வரை நடைபெற்றது.
வாழ்க்கையின் சவாலான நேரங்களில் நம்பிக்கை எப்போதும் சாத்தியம் என்பதை உறுதிப்படுத்திய இக்கருத்தமர்வு, மரணத் தறுவாயில் இருப்போரின் நல்வாழ்வுக்கான நோய்த்தடுப்பு சிகிச்சையில் கல்வி மற்றும் சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த கலாச்சாரத்தை ஊக்குவிப்பது குறித்தும், மருத்துவம், சுகாதாரம், நெறிமுறைகள், பராமரிப்பு மற்றும் நோயினால் ஏற்படும் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான வழிகள், மேலும் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கிடையே வாழ்க்கைத்தரம், அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டன.
இக்கருத்தமர்வுக்கு வழங்கிய செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோய்த்தடுப்பு சிகிச்சையில் விடாமுயற்சியுடன் கூடிய அர்ப்பணிப்பு உணர்வில் பணிபுரிபவர்களைப் பாராட்டியதுடன், இவ்வகையான சிகிச்சையினை ஊக்குவிப்பது இரக்கத்தின் வெளிப்பாடு மற்றும் ஒவ்வொரு நபரையும் மதிக்கும் செயல் என்றார்.
பல்வேறு சமய மற்றும் கலாச்சாரக் கண்ணோட்டங்களைக் கொண்ட பல மதங்களை உள்ளடக்கிய கூட்டுக் குழு, நோய்வாய்ப்பட்டோர் மற்றும் இறக்கும் தறுவாயில் இருப்போரின் தேவைகளை ஆதரிப்பதையும், அவர்களின் உடல், ஆன்மிக மற்றும் உணர்வுகள் சார்ந்த துன்பங்களுக்கு மத்தியில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதில் உள்ள முக்கியத்துவதையும் இக்கருத்தமர்வில் உறுதிப்படுத்தியது.
நல்வாழ்வுக்கான தோய்த்தடுப்பு சிகிச்சைமுறை என்பது துன்பப்படும் மற்றும் இறக்கும் தறுவாயில் இருக்கும் மனிதருக்கு நாம் காட்டும் அன்பு, இரக்கம், மற்றும் மரியாதை என்பதைச் சுட்டிக்காட்டிய இக்கருத்தரங்கின் தலைவர் ஆயர் நோயல் சிமார்ட் அவர்கள், தற்போதைய நடைமுறைகளில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நோய்த்தடுப்பு சிகிச்சையை மேம்படுத்துவதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
”குணமாக்குவது சாத்தியமில்லை என்றாலும், பிறரை கவனித்துக்கொள்வது எப்போதும் சாத்தியமே” என்று கூறிய, வாழ்வுக்கான திருப்பீடக்கழகத்தின் தலைவர் பேராயர் வின்சென்சோ பாலியா அவர்கள், நோய்த்தடுப்பு சிகிச்சை என்பது மருத்துவத்தின் ஓர் ஆழமான மனிதப் பார்வை என்றும், இச்சிறப்புத்தொண்டு எப்போதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கனடா நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் வில்லியம் டி. மெக்ராட்டன் கூறுகையில், சமுதாயத்தில் நோய்வாய்ப்பட்ட மற்றும் இறக்கும் தறுவாயில் உள்ளவர்களுக்கு உதவுவதும், அன்பு செலுத்துவதும் நம் ஒவ்வொருவரின் கடமை என்றும், அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு ஆதரவளிப்பதும், தேவையின்போது அவர்கள் தனிமைப்படுத்தப்படாமலும், மறக்கப்படாமலும் இருக்கவேண்டியதன் அவசித்தை உறுதிப்படுத்தும் இக்கருத்தமர்வு, வாழ்வுக்கான அர்ப்பணிப்பையும் மற்றும் முழுமையான பராமரிப்பையும் வெளிப்படுத்திடுவதாக அமைந்திருக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.