ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு வருங்காலத்தை வழிநடத்தும் ஒழுக்க நெறி மற்றும் ஆன்மீக மதிப்பீடுகளை விட்டுச்செல்ல விரும்புகிறார்கள்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு உணவையும் உடையையும் மட்டும் விட்டுச்செல்ல அல்ல, மாறாக அனைத்திற்கும் மேலாக, வாழ்வின் உயரிய அர்த்தம், வருங்காலத்தை வழிநடத்தி, அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான பலத்தை வழங்கும் ஒழுக்க நெறி மற்றும் ஆன்மிக மதிப்பீடுகளையும் விட்டுச்செல்ல விரும்புகிறார்கள் என அபுதாபியில் இடம்பெற்றக் கூட்டத்தில் உரையாற்றினார், தென் அரேபியாவிற்கான அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் பவுலோ மர்த்தினெல்லி.
மனித உடன்பிறந்த நிலை என்ற அமைப்பின் உயர்மட்ட அவையாலும், இஸ்லாமிய மூத்தோர் அவையாலும் இணைந்து அபுதாபியில் ஏற்பாடுச் செய்யப்பட்ட ‘அமைதியான சமூகங்களை கட்டியெழுப்ப பங்களிக்கும் ஒழுக்கரீதி கல்வி’ என்ற கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு குறிப்பிட்ட ஆயர் மர்த்தினெல்லி அவர்கள், கல்வி நடவடிக்கை என்பது நம்பிக்கையின் நடவடிக்கை என்பதை சுட்டிக்காட்டி, கல்வியில் முதலீடுச் செய்வது வருங்காலத்திற்கென முதலீடு செய்வதாகும் என்பதையும் எடுத்துரைத்தார்.
கல்வி அனுபவங்களை மதக்கண்ணோட்டத்தில் அணுகும்போது, மனிதாபிமானமும் உடன்பிறந்த உணர்வும் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்ப நல்மனம் கொண்டவர்களுடன் ஒத்துழைக்க கடவுளுடன் நாம் கொள்ளும் உறவு உதவுகிறது என கூறினார் அப்போஸ்தலிக்க நிர்வாகி.
மக்களின் மனச்சான்றுகளில் புதிய மதிப்பீடுகளைப் புகுத்துவதில் பன்மதங்களிடையேயான கல்வி உதவுகிறது என்ற ஆயர் மர்த்தினெல்லி அவர்கள், பன்முகத்தன்மையையும் மதங்களையும் மதிப்பவர்களாக, பல்வேறு மதங்களைச் சேர்ந்த நாம் ஒன்றிணைந்து ஒருவரையொருவர் மதித்து மனித குலத்தின் நன்மைக்காக ஒழுக்க ரீதி மற்றும் ஆன்மீக மதிப்பீடுகளை ஊக்குவிக்க அழைப்புப் பெற்றுள்ளோம் என்றார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் திருஅவையால் நடத்தப்படும் பள்ளிகள், மதங்களிடையேயான கல்விக்கு எளிமையான பங்களிப்பை வழங்குவதாக, புதிய தலைமுறையினரிடையே ஒத்துழைப்பையும் ஒருமைப்பாட்டையும் ஊக்குவிப்பற்காகச் சேவையாற்றுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார் ஆயர் மர்த்தினெல்லி.