2022 ஆம் ஆண்டு உக்ரைன் இரஷ்யா போர் தீவிரமடைந்த காலத்தில் இருந்து, ஏறக்குறைய 1,957 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

உக்ரைனில் போர் தொடங்கி  780 நாள்களுக்குப் பின்னரும், பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 57 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர் என்றும் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.

ஏப்ரல் 13 சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி, 2022 ஆம் ஆண்டு உக்ரைன் இரஷ்யா போர் தீவிரமடைந்த காலத்தில் இருந்து, ஏறக்குறைய 1,957 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கான வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன, அழிக்கப்பட்டுள்ளன என்றும் கவலை தெரிவித்துள்ளது.

அண்மைய வாரங்களில் மக்கள் வாழும் பகுதிகளில் ஏற்பட்ட தாக்குதல்களினால் நீர், நலவாழ்வு, கல்வி, மின்சாரம் மற்றும் பிறசேவைகள் பெறுவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன என்றும், குழந்தைகள் கொல்லப்படுதல் மற்றும் காயமடைதல் அவர்களின் குடும்பத்தினர், நண்பர் மற்றும் சமூகத்திற்குப் பெரும் வேதனையை ஏற்படுத்துகின்றது என்றும்  அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லா நேரங்களிலும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும், நிம்மதியாக வாழவும், குழந்தைப் பருவத்தை மீண்டும் அனுபவிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது அவ்வறிக்கை.

உக்ரேனிய குழந்தைகள் தங்கள் பெற்றோர், அன்புக்குரியவர்கள், நண்பர்களை இழந்துள்ளனர் என்றும், தங்கள் வீடுகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களை இழந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *