பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறை இன்றும் நாம் சிறப்பிக்கின்றோம். நம் அன்னையாம் திருஅவை இந்நாளை நல்லாயன் ஞாயிறாகவும், இறையழைத்தல் ஞாயிறாகவும் கொண்டாடி மகிழ்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவை நல்ல ஆயர், மேய்ப்பர், தலைவர் என்று வரையறை செய்கிறது. “கொடி என்ற தோளும், முடி என்ற தலையும் மட்டுமன்றி, இடித்தாங்கும் நெஞ்சம் இருந்தால் அவனே தலைவன், பூவின் அழகை இரசிக்கவும் தெரிந்து, பூகம்ப அதிர்வைத் தாங்கவும் முடிந்தால் அவனே தலைவன்” என்று தலைமைத்துவத்துக்கான இலக்கணமாக வரையறை செய்கின்றார் சுப. வீரபாண்டியன். “ஒரு தலைவருக்குரிய முக்கிய அடையாளமே அவர் கொண்டிருக்கும் அணுகுமுறைதான்” என்கின்றார் தியோடர் கெஸ்பர்க். “தலைமைத்துவம் என்பது முடி சூட்டிக்கொள்வது மட்டுமல்ல, தழும்புகளைத் தாங்குவதும்தான்” என்கின்றார் ஆல்பர்ட் ஸ்வைட்சர். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு சிந்திக்கும்போது என் நினைவுக்கு அடிக்கடி வருவது கறுப்பின மக்களின் தலைவரான மறைந்த மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர். அதற்கு முக்கிய காரணம் இயேசுவின் வழியில்  அவரொரு நல்ல ஆயராகத் திகழ்ந்தார் என்பதுதான்.