தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர் (மத் 5:8) என்கிறார் இயேசு.

பொய், புரட்டு, திருட்டு, போலித்தனம், ஏமாற்றுதல், வஞ்சித்தல், அபகரித்தல், கொள்ளையிடல் என்பவையெல்லாம் தூய்மைக்கு எதிரான தீமையின் படைகள். இப்படைகளே உலகை ஆட்டிப் படைக்கும் சூழலில் தூய்மையான உள்ள உணர்வோடு வாழ்தல் என்பது எளிதன்று.

கடவுளுக்கு நம்மைப் பற்றி ஒரு கனவு உண்டு. அது, நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் (எபே 1:4) வாழ வேண்டுமென்பதே. அவரது கனவுக்கு நாம் நம் வாழ்வால் உயிரூட்டுகையில் அவரே தம்மை நமக்கு வெளிப்படுத்துவார் என்பதே அவரது வாக்குறுதி.

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த அறிவியலாளர் சர் ஹம்பிரி டேவி நீண்ட ஆய்வுகளுக்குப் பின் நிலக்கரிச் சுரங்கத்திற்குள் கொண்டு செல்லும் தீப்பற்றி எரியாத விளக்கைக் கண்டுபிடித்தார். இதனை அறிந்து அவரது நண்பர் ஜான் பவுல், “நண்பரே, இதை அரசிடம் பதிவு செய்து உரிமம் பெற்றால் நல்ல பணம் கிடைக்கும்” என அறிவுறுத்த, “இல்லை, மனித குலத்துக்குத் தூய உள்ளத்தோடு நான் வேலை செய்யும் வாய்ப்பே நான் விரும்பும் பரிசு” எனப் பதிலளித்தார் டேவி. தூய உள்ளத்தோர் கடவுளைக் காணத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அவர்களே கடவுளின் மறுவுரு. நம் உள்ளம் எப்படியோ அப்படியே நாம் பார்க்கும் இந்த உலகமும்.