தூய ஆவியின் ஆற்றலை நாம் நாடாவிட்டால் நாம் தொலைந்து போனவர்கள் போலாகின்றோம் – கர்தினால் பரோலின்
உணவைத் துறப்பதல்ல நோன்பு, மாறாக “கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு” என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகளை மேற்கோள்காட்டினார் கர்தினால் பியத்ரோ பரோலின்.
பிப்ரவரி 16 வெள்ளிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 6.30 மணியளவில் உரோம் இயேசு கோவிலில் நடைபெற்ற லித்துவேனியா இரஷ்யாவிடமிருந்து விடுதலை பெற்ற 106 வது ஆண்டுவிழா திருப்பலியின்போது ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.
ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுகின்றன என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், தூய ஆவியின் ஆற்றலை நாம் நாடாவிட்டால் நாம் தொலைந்து போனவர்கள் போலாகின்றோம் என்றும், செபம் இல்லாமல், பூமி மற்றும் பூமிக்குரிய விஷயங்கள் என நம்மை ஈர்ப்பவற்றிலிருந்து நம்மால் வெற்றி பெற முடியாது என்றும் வலியுறுத்தினார்.
லித்துவேனியாவின் பல்வேறு அரசுத்தூதர்கள் மற்றும் மக்கள் பங்கேற்ற இத்திருப்பலியில் உலக அமைதிக்காக செபிக்க அதிகமாக வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், ஐரோப்பா, மத்திய தரைக்கடல் பகுதிகள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் அமைதியை மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும், அச்சுறுத்தும் போர்க்காற்றினால் உக்ரைன் மக்கள் தாக்கப்படுகின்றார்கள் என்றும் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி வலியுறுத்தும் வார்த்தைகளான போர் என்பது எப்போதும் தோல்விதான் என்ற வார்த்தைகளை மேற்கோள்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், இயேசுவின் பெயரால் நமது விண்ணப்பங்களை இறைத்தந்தையிடம் எடுத்துரைக்கும் நாம், அமைதி என்னும் அற்புதம் நம் வாழ்வில் நிகழ்ந்தேறும் என்று நம்புவதை நிறுத்திவிடக்கூடாது என்றும் எடுத்துரைத்தார்.
மேலும் திருப்பலியின் நிறைவில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், இரஷ்ய எதிர்க்கட்சித்தலைவரான அலெக்சி நவால்னி அவர்களின் மறைவு நம்மை திகைப்பில் ஆழ்த்துகின்றது என்றும் துன்பத்தால் நிரப்புகின்றது என்றும் கூறினார்.
இரஷ்ய அரசுத்தலைவைர் விளாடிமீர் புதினின் கருத்துக்களையும் கொள்கைகளையும் எதிர்த்ததற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு 19 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டார். 47 வயதான இரஷ்ய எதிர்கட்சித்தலைவர் அலெக்சி நவால்னி அவர்கள் மர்மமான முறையில் சிறையில் இறந்ததைத் தொடர்ந்து அவரது இறப்பு குறித்து வருந்துவதாகவும் எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.