மனித குடும்பத்தின் அனைத்து அங்கத்தினர்களும் வரவேற்கப்பட்டு பொதுநலனைக் கருத்தில் கொண்டதாக ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தின் கெய்ரோவில் ‘மக்கள் தொகையும் வளர்ச்சித் திட்டங்களும்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற அனைத்துலகக் கருத்தரங்கின் தீர்மானங்கள் எவ்விதம் செயல்படுத்தப்படுகின்றன மற்றும் இன்றைய உலகில் அவைகளின் முக்கியத்துவம் என்பது குறித்து ஐ.நா. அவைக்கூட்டத்தில் உரையாற்றினார் திருப்பீட பிரதிநிதி பேராயர் கபிரியேலே காச்சா.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் ஏப்ரல் 29, திங்களன்று திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய பேராயர் காச்சா அவர்கள், கடந்த 30 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து சிந்திப்பதற்கு வழங்கப்பட்டுள்ள இந்த நல்ல வாய்ப்பை திருப்பீடம் வரவேற்பதாகத் தெரிவித்தார்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கெய்ரோ கருத்தரங்கு, தனியார்கள் மற்றும் குடும்பங்களின் நல்வாழ்வை உறுதிசெய்யும் நோக்கத்துடன், மக்கள் தொகைக்கும் வளர்ச்சிக்கும் இடையேயான நெருங்கிய உறவை உறுதிச்செய்வதாக இருந்தது என்ற பேராயர் காச்சா அவர்கள், மக்கள் பெருக்கம் என்பது வளர்ச்சிக்கான இடையூறு அல்ல, மாறாக, நிலையான வளர்ச்சிக்கான அக்கறையின் மையமாக இருக்கிறது என்பதை உணர முடிந்தது என உரைத்தார்.
மனித குடும்பத்தின் அனைத்து அங்கத்தினர்களும் வரவேற்கப்பட்டு பொதுநலனைக் கருத்தில் கொண்டதாக ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் கெய்ரோ அனைத்துலகக் கருத்தரங்கோடு திருப்பீடமும் தொடர்ந்து ஒத்திணங்கிச் செல்கிறது என மேலும் ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார் பேராயர் காச்சா.
கடந்த முப்பதாண்டுகளாக சில வளர்ச்சி நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தாலும், பல சவால்கள் குறிப்பாக ஏழ்மை ஒழிப்புப் போன்ற பிரச்சனைகள் இன்னும் தொடர்கின்றன என்பதையும் எடுத்துரைத்த பேராயர், கடந்த காலங்களில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் போதிய ஆர்வம் காட்டப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மக்கள் தொகைப் பெருக்கத்திற்குத் தீர்வு காண வேண்டும் என்ற அணுகுமுறையால் கருக்கலைத்தல் போன்றவை ஊக்குவிக்கப்படுகின்றன என்ற பேராயர் காச்சா அவர்கள், இது ஊறுவிளைவிக்கும் தப்பான எண்ணம் மட்டுமல்ல, மனித வாழ்வின் புனிதத்துவத்தை மதிப்பதிலிருந்து மக்களை விலகிச் செல்ல வைக்கின்றது என மேலும் தன் கவலையை வெளியிட்டார்.