இந்த உலகில் தொடர்ந்துவரும் மோதல்கள், அமைதியின் அவசியம் குறித்த நம் அக்கறையை புதுப்பிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றன
கிறிஸ்தவர்களும் புத்தமதத்தினரும் அமைதியையும், ஒப்புரவையும், நெகிழ்திறனையும் கொண்ட உலகை கட்டியெழுப்புவதில் பகிரப்பட்ட பொறுப்புணர்வைக் கொண்டுள்ளார்கள் என புத்த மதத்தினரின் வேசாக் விழாவையொட்டி அனுப்பியச் செய்தியில் கூறியுள்ளார், மதங்களிடையேயான கலந்துரையாடலுக்கான திருப்பீடத்துறையின் தலைவர்.
கௌதம புத்தர் பிறந்ததன் விழாவைக் குறிக்கும் வேசாக் விழாவையொட்டி உலகிலுள்ள புத்தமதத்தினர் அனைவருக்கும் தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ள கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், இந்த உலகின் காயங்களைக் குணப்படுத்த கிறிஸ்தவம் மற்றும் புத்தமதத்தினர் ஒன்றிணைந்து உழைக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த உலகில் தொடர்ந்துவரும் மோதல்கள், அமைதியின் அவசியம் குறித்த நம் அக்கறையை புதுப்பிக்க வேண்டிய தேவையை வலியுறுத்தி நிற்கின்றன என்ற கர்தினால் Ayuso அவர்கள், அமைதியையும் ஒப்புரவையும், நெகிழ்திறனையும் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டியதன் அவசியத்தையும் தன் செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.
அரசியல், பொருளாதார, மற்றும் கலாச்சாரத் துறைகளில் நீதியும் சரிநிகர் நிலைகளும் இடம்பெறுவதன் வழியாகத்தான் உண்மையான ஒப்புரவைப் பெறமுடியும், ஏனெனில், மோதல்களுக்கான அடிப்படைக் காரணங்கள் ஆராயப்பட்டு அகற்றப்பட வேண்டியது அவசியம் என கர்தினாலின் வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
மன்னிப்பு மற்றும் ஒப்புரவின் முக்கியத்துவம், பகைமை மற்றும் மன்னிப்பு குறித்த உள்ளோளி, திருத்தந்தையின் Fratelli tutti மடல் ஆகியவை குறித்தும் தன் வேசாக் திருவிழாவுக்கான வாழ்த்து மடலில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Ayuso.