இறையழைத்தலை சிறப்பாக வாழ்ந்துக் காட்டுவதற்கு இயேசுவின் அன்பில் நிலைத்திருப்பது அவசியம் : திருத்தந்தை பிரான்சிஸ்
அர்ப்பண வாழ்வுக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொருவரின் வாழ்விலும் நல்ல பலனைத் தரும் வகையில், ஒவ்வொரு நாளும் இறையழைத்தல் என்ற கொடை பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் வளர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரேசிலில் அர்ப்பண வாழ்வு அமைப்பு நிறுவப்பட்டதன் 70-ஆம் ஆண்டு நிறைவுவிழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் அதன் பங்கேற்பாளர்களுக்கு வழங்கியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
அர்ப்பண வாழ்வுக்கான மகத்தான இந்த இறையழைத்தலுக்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று பெருமிதத்துடன் கூறியுள்ள திருத்தந்தை, இது அதன் பல்வேறு தனிவரங்களில், திருஅவையின் ஒன்றிப்பை வளப்படுத்துகிறது மற்றும் உலகம் முழுவதும் திருஅவையின் பணிக்குப் பெரிதும் பங்களிக்கிறது என்று எடுத்துக்காட்டியுள்ளார்.
இம்மண்ணுலகின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த நற்செய்தியின் முதல் அறிவிப்பு, அர்ப்பண வாழ்வுக்கு அழைக்கப்பட்ட இருபால் துறவியரின் முகத்தைக் கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆழ்ந்த ஈடுபாட்டுடனும், “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (காண்க. மாற் 16:15) என்ற இயேசுவின் விருப்பக்கட்டளையை ஏற்று செயல்படுத்துகின்றனர் என்றும் விளக்கியுள்ளார்.
இறுதியுணவின்போது, ‘என் அன்பில் நிலைத்திருங்கள்’ (காண்க. யோவா 15:9) என்று இயேசு தனது சீடர்களுக்குக் கூறிய வார்த்தையை உங்கள் மாநாட்டிற்கு மையப்பொருளாக கொண்டுள்ளதைக் குறித்து நான் பெரிதும் மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இறையழைத்தலை சிறப்பாக வாழ்ந்துக் காட்டுவதற்கு அவருடைய அன்பில் நிலைத்திருப்பது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அர்ப்பண வாழ்வு, இயேசுவின் அன்பில் நிலைத்திருந்தால் அழகு காணும் என்று உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழ்மை, கற்பு, மற்றும் கீழ்ப்படிதல் வார்த்தைப்பாடுகள் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பிக்கப்பட்ட அர்ப்பண வாழ்வு ஆண்டில் வழங்கிய தனது சிந்தனைகளையும் அவர்களுக்கு நினைவூட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்