மனிதத்தையும், மனித மாண்புகளையும் பின்னுக்குத் தள்ளி மனிதாபிமானத்தை மரணிக்கச் செய்யும் சட்டங்கள் அனைத்தும் மண்ணாங்கட்டிக்கு ஒப்பானவை.
“ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார் இயேசு (மாற் 2:27-28).
உடல், உள்ள ஓய்வுக்காக ஏற்படுத்தப்பட்ட ஓய்வு நாள் அதன் உள்நோக்கங்களைத் தொலைத்து ஆதிக்கவாதிகளின் அதிகாரச் செலுத்துதலின் நாளாக உருமாற்றப்பட்டது. எந்த ஒரு சட்டமானாலும் அது சமூகத்தில் வாழும் மனிதருக்கு உதவுவதாக, வழிகாட்டுவதாக, பாதுகாப்பு வழங்குவதாக, உரிமைகளை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும். அதேவேளையில் சட்டத்தின் பெயரால் சமூக நீதி மிதிபடுகையில், மனித மாண்பு மாய்கையில் அச்சட்டம் குப்பைத் தொட்டிக்குள் இட வேண்டியதே.
இஸ்ரயேல் மக்களிடையே எழுந்த ஓய்வு நாள் கடைபிடித்தலே ஓய்வு ஆண்டு, யூபிலி ஆண்டு (லேவி 25) என நீண்டது. இவை நல்லெண்ணங்களை உள்ளடக்கிய நன்முயற்சிகள். ஏழையரின் வாழ்வு மீட்டல். நாளடைவில் இந்நற்பார்வை நலிந்து ஓய்வு நாள் வெறும் சட்ட நாளாக்கப்பட்டது. இதனால் மனிதமும், மனித மாண்புகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டன. மனிதாபிமானத்தை மரணிக்கச் செய்யும் சட்டங்கள் எதுவும் மண்ணாங்கட்டிக்கு ஒப்பானது.