பேராயர் கல்லகர் : திருத்தந்தைக்கும் வியட்நாம் கம்யூனிச அரசு அதிகாரிகள் குழுவுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பால், வியட்நாம் கத்தோலிக்கர்கள் நல்ல பலனடைவர்
வியட்நாம் நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆவலாக உள்ளதாக, வியட்நாம் அரசியல் பிரதிநிதிகள் குழுவை திருத்தந்தை சந்தித்ததையொட்டி தன் கருத்துக்களை வெளியிட்டார் பேராயர் Paul Richard Gallagher.
ஜனவரி 18, வியாழனன்று வியட்நாம் அரசு பிரதிநிதிகள் குழு திருத்தந்தையைச் சந்தித்து உரையாடியதையொட்டி, நாடுகளுடன் உறவுகளுக்கான திருப்பீடத்துறையின் செயலர் பேராயர் கல்லகர், இச்சந்திப்பு மிகச் சிறந்தமுறையில் இடம்பெற்றதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் அடையாளமாக இருந்ததாகவும், அந்நாட்டிற்கு திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக இது நோக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
திருத்தந்தைக்கும் வியட்நாம் கம்யூனிச அரசு அதிகாரிகள் குழுவுக்கும் இடையே இடம்பெற்ற இந்த சந்திப்பால், அரசியல் உறவு முன்னேற்றங்கள் இடம்பெறுவதுடன், வியட்நாம் கத்தோலிக்கர்களும் நல்ல பலனடைவார்கள் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் பேராயர்.
வியட்நாம் நாட்டில் திருப்பீடத் தூதுவர் ஒருவர் தங்கியிருந்து செயலாற்றுவது குறித்த ஒப்பந்தம் 2023 டிசம்பரில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்டது குறித்தும் எடுத்துரைத்தார், நாடுகளுடன் உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் வியட்நாம் அரசுத் தலைவர் Vo Van Thuong அவர்கள் திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடியதையும் நினைவுபடுத்திய பேராயர் கல்லகர், திருத்தந்தை அவர்கள் வியட்நாம் நாட்டிற்கு பயணம் மேற்கொள்வது குறித்து மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் மங்கோலியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கிருந்து திரும்பும் வழியில் விமானத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, வியட்நாம் நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்வதற்கான தன் ஆவலை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.