பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறை இன்றும் நாம் சிறப்பிக்கின்றோம். நம் அன்னையாம் திருஅவை இந்நாளை நல்லாயன் ஞாயிறாகவும், இறையழைத்தல் ஞாயிறாகவும் கொண்டாடி மகிழ்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவை நல்ல ஆயர், மேய்ப்பர், தலைவர் என்று வரையறை செய்கிறது. “கொடி என்ற தோளும், முடி என்ற தலையும் மட்டுமன்றி, இடித்தாங்கும் நெஞ்சம் இருந்தால் அவனே தலைவன், பூவின் அழகை இரசிக்கவும் தெரிந்து, பூகம்ப அதிர்வைத் தாங்கவும் முடிந்தால் அவனே தலைவன்” என்று தலைமைத்துவத்துக்கான இலக்கணமாக வரையறை செய்கின்றார் சுப. வீரபாண்டியன். “ஒரு தலைவருக்குரிய முக்கிய அடையாளமே அவர் கொண்டிருக்கும் அணுகுமுறைதான்” என்கின்றார் தியோடர் கெஸ்பர்க். “தலைமைத்துவம் என்பது முடி சூட்டிக்கொள்வது மட்டுமல்ல, தழும்புகளைத் தாங்குவதும்தான்” என்கின்றார் ஆல்பர்ட் ஸ்வைட்சர். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு சிந்திக்கும்போது என் நினைவுக்கு அடிக்கடி வருவது கறுப்பின மக்களின் தலைவரான மறைந்த மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர். அதற்கு முக்கிய காரணம் இயேசுவின் வழியில் அவரொரு நல்ல ஆயராகத் திகழ்ந்தார் என்பதுதான்.
1963-ஆம் ஆண்டு லிங்கன் சதுக்க்கத்தில் அவர் நிகழ்த்திய ஓர் உரை ஒட்டுமொத்த கருப்பின மக்களின் இரத்தத்தில் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் பாய்ச்சியது. தங்களின் உரிமைக்காக அவர்களை அறவழியில் போராடத் தூண்டியது. தங்கள் விடுதலைக்காகக் கனவு காணத் தூண்டியது. அமெரிக்காவில் நடந்த இனப்போராட்டத்தின் முடிவைத் தொடங்கிவைத்ததில் அவ்வுரைக்கும் அதைப் பேசிய அம்மனிதருக்கும் மிகப்பெரிய பங்குண்டு. தனது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் அதைத் தேடிச் சென்று அரவணைத்துக்கொண்டு தனது போராட்டத்தில் வெற்றி கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க மனிதர்தான் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர். ஆபிரகாம் லிங்கனுக்குப் பிறகு அடிமைகளாக இருந்த கருப்பர் இனத்தவரின் விடிவெள்ளியாய், நம்பிக்கை நாயகனாய், நல்லாயனாய்த் திகழ்ந்தவர் மார்டின் லூத்தர் கிங். அவரிடம் இருந்து புறப்பட்டவையெல்லாம் வெறும் சொற்கள் அல்ல. அவை சமத்துவ சமுதாயத்தைப் படைக்கத் தூண்டிய அம்புகள். அச்சொற்கள் உறையும் குளிரில் இரத்ததைக் கொதிக்க வைக்கும் தீப்பிழம்புகள். ஆனால் அமைதியை மட்டுமே வலியுறுத்தியவை. இன்றும் உலக வரலாற்றின் தலைசிறந்த உரைகளில் அவர் ஆற்றிய ‘எனக்கொரு கனவுண்டு’ அதாவது, ‘I Have a Dream’ என்ற உரை முக்கியமானதாகப் போற்றப்படுகிறது. இவ்வுரை, ஒவ்வொரு கறுப்பின அமெரிக்கரையும் தனது சுதந்திரத்திற்காக வெகுண்டெழுந்துப் போராடத் தூண்டியது என்றால், அது மிகையாகாது.