இறைமகன் இயேசுவின் தாயாக தன்னை அர்ப்பணித்து உலக மக்கள் அனைவரின் தாயாகத் திகழும் அன்னை மரியா ஜெபமாலை அன்னையாக நம் நடுவில் இருந்து, அல்லல் நீக்கி ஆற்றல் தருகின்றார்.
வார்த்தைகளற்ற வடிவமாய், அளவுகோள்கள் இல்லாத அன்பாய்த் திகழ்பவர் அன்னை. ஆயிரம் நிலவுகள் அடிக்கடி நம் வாழ்வில் வந்துபோனாலும் எப்போதும் இருக்கும் ஒரே சூரியன் போன்று நம்மை அனுதினமும் காத்து ஆற்றல் தருபவர் நம் தாய். இறைமகன் இயேசுவின் தாயாக தன்னை அர்ப்பணித்து உலக மக்கள் அனைவரின் தாயாகத் திகழும் அன்னை மரியா, ஜெபமாலை அன்னையாக நம் நடுவில் இருந்து, அல்லல் நீக்கி ஆற்றல் தருகின்றார். “இறைவன் படைத்த அழகிய மலர் மரியா என்றால், அந்த அழகிய மலரால் தொடுத்தெடுக்கப்பட்ட மாலையே செபமாலை” செபமாலை என்பது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மிகப் பெரிய மந்திரக்கோல். அது மந்திரக்கோல் மட்டுமல்ல நாம் விண்ணகம் செல்ல விண்ணக தந்தையால் கொடுக்கப்பட்ட விண்ணகத்திற்கான திறவுகோல். அன்னையின் வணக்க மாதத்தைச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் வேளையில் கோயம்புத்தூர் மறைமாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள தூய செபமாலை அன்னை அருள்தலம் பற்றி கருத்துக்களை இன்றைய நம் நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்தந்தை அருண்.
கோயம்புத்தூர் மறைமாவட்டத்தை சார்ந்த k.அருண் அவர்கள் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை அருள்தலத்தின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். தந்தை அவர்களை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் ஜெபமாலை அன்னை பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க அன்புடன் அழைக்கின்றோம்.