காவி சட்டை, காவித்துண்டுகள் அணிந்த நூற்றுக்கணக்கான அனுமான் சேனையினர் தெலுங்கானாவில் மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள கண்ணேபள்ளி என்னும் கிராமத்தில் உள்ள அன்னை தெரசா ஆங்கில வழி பள்ளியை ஏப்ரல் மாதம் 16 ஆம்தேதி சூறையாடி, அடித்து நொறுக்கி பெருத்த சேதத்தை விளைவித்தனர். ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட்டுக்கொண்டே உள்ளே புகுந்த இந்த அடிப்படைவாதிகள் கற்களால் ஜன்னல் கண்ணாடிகளையும் அன்னை தெரசா திருச்சுருபத்தையும் தாக்கிக் கொண்டே உள்ளே நுழைந்து பூந்தொட்டிகளை தூக்கி உடைத்து போர்க்களமாக்கினர். பள்ளிக்கூடத்தில் மாணவ மாணவிகள் வகுப்பறையில் இருக்கும்போது நடைபெற்ற சம்பவத்தால் அவர்கள் மிகுந்த பதற்றத்திற்குள்ளாகினர். பள்ளி வளாகத்திலேயே தரையில் அமர்ந்து ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என்று கும்பலாக கோஷமிட்டனர். ஆஊக்ஷளு என்றழைக்கப்படும் மிஷனரி காங்கிரிகேஷன் ஆப் த பிளஸ்ஸடு சேக்ரமென்ட் சபையைச் சேர்ந்த இப்பள்ளியில் அதன் மேலாளரான அருட்பணியாளர் ஜெய்மோன் ஜோசப் அவர்களுடைய அறையில் புகுந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக தாக்கி, கன்னத்தில் அறைந்தனர்.