காசாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை உயிரை இழக்கிறது என்று நினைக்கும்போது, இந்தப் போர் அண்மைகால வரலாற்றில் மிகக் கொடிய மற்றும் அழிவுகரமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது : Save the Children அமைப்பின் தலைவர் Daniela Fatarella

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

காசாவில் நிகழ்ந்துவரும் கடந்த 6 மாத மோதலில், ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை தனது உயிரை இழக்கிறது என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தை நல அமைப்பு.

இந்த மரணங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துலகச் சமூகத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அவ்வமைப்பின் பணியாளர்கள் உரோமையிலுள்ள அதன் தலைமையகம் அருகே ஒன்றுகூடி, பயங்கர உருவம் கொண்ட பதாகை ஒன்றைக் காட்டினர் என்று அவ்வமைப்பின் செய்தியறிக்கைத் தெரிவிக்கின்றது.

காசாவில் மோதல் நிகழும் பகுதிகளில் குழந்தைகளின் அடிப்படை வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டதை எடுத்துக்காட்டும் விதமாக, அக்குழந்தைகள் பயன்படுத்தும் பல்வேறு பொருள்கள் அதன் தலைமை அலுவலகத்தின் படிக்கட்டுகளில் பலரின் பார்வைக்காக வைக்கப்பட்டது என்றும் அதன் செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.  

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அதன் அமைப்பின் தலைவர் Daniela Fatarella அவர்கள், ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை உயிரை இழக்கிறது என்று நினைப்பது, இந்தப் போர் அண்மைகால வரலாற்றில் மிகக் கொடிய மற்றும் அழிவுகரமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கடந்த ஆறு மாதமாக நிகழ்ந்து வரும் மோதலில், ஏறத்தாழ 26,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்றும்,  உயிர் பிழைத்தவர்கள் தங்கள் வீடுகளையும், தங்கள் அன்புக்குரியவர்களையும், தாங்கள் படித்த பள்ளிகளையும், தங்கள் அன்றாட வாழ்க்கையையும் இழந்து, இன்று பட்டினியால் வாடுகிறார்கள் என்றும் பெரும் கவலையுடன் எடுத்துக்காட்டியுள்ளார்.

இத்தகையதொரு மோசமான நிலை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனச்  சுட்டிக்காட்டியுள்ள Fatarella அவர்கள், உடனடி மற்றும் உறுதியான போர்நிறுத்தம் மற்றும் கட்டுப்பாடற்ற மனிதாபிமான அணுகலை உறுதிப்படுத்த உலகம் இப்போது செயல்பட வேண்டும் என்று விண்னப்பித்துள்ளார்.

இங்கு வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளும் அழிக்கப்பட்ட குழந்தைகளின் உயிர்களை நமக்கு நினைவூட்டுகிறது என்றும், ஆனால் அதேவேளையில், அதில் வன்முறைக்கும் மரணத்திற்கும் இடமில்லாத ஒரு குழந்தையின் வாழ்க்கையை நிரப்ப வேண்டிய அனைத்து அழகுகளையும் அவைகள் நமக்கு நினைவுபடுத்துகின்றன என்றும் விளக்கியுள்ளார் Fatarella.

Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தை நல அமைப்பு, பாலஸ்தீனிய குழந்தைகளுக்கு அத்தியாவசிய சேவைகளையும் ஆதரவையும் 1953-ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய நில எல்லைப் பகுதிகளில் உள்ள அமைப்பின் குழு 24 மணி நேரமும் உழைத்து, தீவிர அவசரநிலையில் உள்ள மக்களுக்கு உதவ முக்கிய ஏற்பாடுகளை செய்து காசாவிற்கு உதவி பெறுவதற்கான வழியைக்  கண்டறிய உதவி வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்